புக்கிட் டமன்சாராவில் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீடு இருக்கும் இடத்தில் பெர்சே எதிர்ப்புக் குழுக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்ற வேளையில் பெர்சே அமைப்பின் இன்னொரு இணைத் தலைவரான பாக் சமாட் என அழைக்கப்படும் ஏ சமாட் சைட் வீடு அமைந்துள்ள பங்சார் உத்தாமா அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி எல்லாம் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நடந்தது முதல் பெர்சே எதிர்ப்புக் குழுக்கள் அம்பிகா வீட்டுக்கு அருகில் பேர்கர் கடைகளை அமைத்தன. பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சியையும் செய்துள்ளன.
அம்பிகா தமது இனம், சமயம், பெண்ணாக இருப்பது ஆகியவை காரணமாக குறி வைக்கப்பட்டுள்ளதாக பாக் சமாட் சொன்னார். அந்த அம்சங்களை அதிகார வர்க்கம் அடிக்கடி பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தலைமை தாங்குவதற்கு அம்பிகாவே பொருத்தமானவர். அவர் நிறைய அனுபவம் உள்ள வழக்குரைஞர். அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒர் இந்தியர், முஸ்லிம் அல்லாதவர். அதுதான் துரதிர்ஷ்டம்.”
“நான் அம்பிகாவாக இருந்தால் அவரைக் குறி வைக்கும் அந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்க மாட்டா”, என மலேசியாகினிக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்தார்.
இனம் என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகும். மலாய்க்காரர்களின் நிலைக்கு மருட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு அதிகார வர்க்கம் அவற்றைப் பயன்படுத்துகின்றது.
தாமும் கூட இது போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியதாகவும் ஆனால் அம்பிகா எதிர்நோக்கும் அச்சுறுத்தல் அளவுக்குக் கடுமையானதாக இல்லையெனவும் அந்த தேசிய இலக்கியவாதி குறிப்பிட்டார்.
“நான் ஏற்கனவே மலாய்க்காரன், நான் மலேசியனாக விரும்புகிறேன்”
பெர்சே இயக்கத்தில் பங்கு கொண்டதின் மூலம் சொந்த இனத்துக்கே தாம் துரோகம் செய்து விட்டதாகக் கூறப்படுவது அந்தக் குற்றச்சாட்டுக்களில் ஒன்றாகும் என்றார் அவர்.
“நான் என் இனத்துக்காக போராடவில்லை எனக் கூறுவது… நான் மலாய்க்காரனாக இருக்க வேண்டும் என என்னைக் கேட்டுக் கொள்ள வேண்டியதில்லை. நான் ஏற்கனவே மலாய்க்காரன். நான் மலேசியனாக விரும்புகிறேன்,” என தமது வழக்கமான கவிதை பாணியில் பாக் சமாட் சொன்னார்.
முதுமையானவன் என்று கூட தாம் முத்திரை குத்தப்பட்டுள்ளதாக 80 வயதை எட்டும் அவர் குறிப்பிட்டார்.
“ஆகவே என்னை பேசுவதற்கு அழைப்பவர்கள் உண்மையில் முட்டாள்களாக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
“எனக்கு வயது கூடும் போது நான் முட்டாளாவது இல்லை. வயது அதிகரிக்க அதிகரிக்க விவேகமும் கூடுகிறது,” என்றும் பாக் சமாட் அந்தப் பேட்டியில் சொன்னார்.
தமது முதிய வயது “அதிகார வர்க்கத்தின் அடிமையாக” இருப்பதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகப் பேச அனுமதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தாம் பத்திரிக்கையாளராகவும் ஆசிரியராகவும் முக்கிய பத்திரிக்கைகளில் தாம் பணியாற்றிய காலத்தையே அவர் “அதிகார வர்க்கத்தின் அடிமை” எனக் கூறினார்.
“அந்த நேரத்தில் நான் பத்திரிகைகளில் வேலை செய்த போது அதிகார வர்க்கத்தின் சேவகனாக இருந்தேன். அந்த நேரத்தில் நான் பராமரிப்பதற்கு குடும்பம் இருந்தது. பிள்ளைகளும் இருந்தார்கள்.”
“அதன் காரணமாக நான், என் குடுபத்திற்காக நான் எல்லா கசப்புக்களை விழுங்கிக் கொண்டேன். ஆனால் நான் இப்போது தாக்குதல் தொடுக்கத் தயாராக இருக்கிறேன்”, என்றார் பாக் சமாட்.
தேர்தல் சீர்திருத்த போராட்டத்தில் பங்கு கொண்டுள்ள பிரபலமான இலக்கியகர்த்தாவாக பாக் சமாட் இருக்கலாம். ஆனால் அவரது போராட்டத்தை அவருடைய சக இலக்கியவாதிகள் ஒப்புக் கொள்ளவில்லை. சிலர் கடுமையாக விமர்சனமும் செய்கின்றனர்.
“இலக்கிய சமூகம் பிளவுபட்டுள்ளது. இலக்கியம் இதில் சம்பந்தப்படவே இல்லை. ஜனநாயகத்தை மேம்படுத்த விரும்புகிறோமா என்பதை முடிவு செய்வது தனி நபர்களைப் பொறுத்தது ”
அந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு சக இலக்கியவாதிகளை வற்புறுத்துவது தமது வேலையல்ல எனக் கூறிய பாக் சமாட், அந்த இயக்கத்தில் சேர வேண்டுமா என்பதை அவர்கள் தங்கள் மனதைக் கேட்க வேண்டும் என்றார்.
“நம் நாட்டின் நிலையை விளக்குவதே என் கடமை. நாம் இதனைத் தொடர வேண்டுமா அல்லது மாற்றத்தை நாம் விரும்புகிறோமா?”
தமது நிலையில் உள்ள மற்றவர்கள் “எடுக்காத பாதையை” தேர்வு செய்ததால் பாக் சமாட் மீது கவனம் பதிந்துள்ளது. அதனால் அவருக்கு மெய்க்காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் நான் அதனை (மெய்க்காவலர்களை) நிராகரித்து விட்டேன். என் வயதில் என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் என்னுடைய நேரம் வந்து விட்டால் நான் மரணமடைய வேண்டும்.. என் மனைவியைத் தவிர மெய்க்காவலர்கள் என்னுடன் இருப்பதை நான் விரும்பவில்லை. அது தான் தலைவிதி. மரணத்திற்க்கான தருணம் வந்து விட்டால் அது தான் மரணம் ,” என்றார் அவர்.