இந்தியர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கான வழி வகைகளை விவாதிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்படும் முதலாவது இந்தியர் பொருளாதார வட்ட மேசைக் கூட்டத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமை தாங்குவார்.
அந்தத் தகவலை பிரதமர் துறை அமைச்சரும் மஇகா தலைவருமான ஜி பழனிவேல் இன்று வெளியிட்டார்.
இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான நீண்ட கால, மத்திம கால திட்டங்களை தயாரிப்பதற்கு பல்வேறு அரசாங்க அமைப்புக்களையும் தனியார் அமைப்புக்களையும் சேர்ந்த 100 தொழில் நிபுணர்களுக்கு விளக்கமளிப்பார் என்றும் அவர் சொன்னார்.
பெமாண்டு என அழைக்கப்படும் நிர்வாக, திறன் மேம்பாட்டு பிரிவு வழியாக பிரதமர் துறை அந்த ஒரு நாள் வட்டமேசைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்திய சமூகத்துக்காக அரசாங்கம் வரைந்துள்ள பல்வேறு சமூக பொருளாதார உருமாற்றத் திட்டங்கள் அந்த ஒரு நாள் கூட்டம் விவாதிக்கும் என்றும் பழனிவேல் கூறினார்.
“நான் அடுத்த இரு வாரங்களில் ஆய்வு அறிக்கை ஒன்றைத் தயாரிப்பேன். பின்னர் அந்த வட்டமேசைக் கூட்டத்துக்கான தேதியை முடிவு செய்வதற்காக நான் பிரதமரைச் சந்திப்பேன். அந்தக் கூட்டம் பெரும்பாலும் ஜுன் மாத இறுதியில் அல்லது ஜுலை தொடக்கத்தில் நிகழும்,” என இந்திய சமூக பொருளாதார உருமாற்றத் திட்டப் பிரிவின் தலைவருமான பழனிவேல் குறிப்பிட்டார்.
அந்த வட்டமேசைக் கூட்டம் பற்றி இன்று நடைபெற்ற முதலாவது விவாதங்களுக்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
-பெர்னாமா