கேஜெ:பக்காத்தான் செராமாக்களில் பிஎன் குழப்பம் விளைவிக்கவில்லை

மாற்றரசுக் கட்சியினரின் செராமாக்களில் புகுந்து குழப்பம் விளைவிக்க பிஎன் ஆள்களை ஏவிவிடுவதாகக் கூறப்படுவதை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் மறுக்கிறார்.

மாற்றரசுக் கட்சியின் செராமா ஒன்றில் கற்களும் தண்ணீர் போத்தல்களும் வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்த ரெம்பாவ் எம்பியுமான கைரி,அப்படிப்பட்ட வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“மலேசிய அரசியலில் வன்முறைக்கு இடமில்லை.மாற்றுக்கட்சியினரின் செராமாக்களை ஊடறுக்க வேண்டும் என்று உத்தரவு எதுவும்  பிறப்பிக்கப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறுவேன்”.மாற்றரசுக் கட்சியினரின் செராமாக்களில் குழப்பம் விளைவிக்குமாறு கூறியிருக்கிறீர்களா என்று வினவியதற்கு அவர் இவ்வாறு கூறினார்.

“வெவ்வேறு கட்சிகளின் செராமாக்கள் அருகருகே நடப்பதற்கு போலீஸ் இடமளிக்கக்கூடாது. கட்சி வேறுபாடு பாராமல் அரசியல்வாதிகள் மற்றும் கூட்டத்தினரின் பாதுகாப்பையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்”.

நேற்றிரவு,பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்துகொண்ட ஒரு செராமாவில்  கூட்டத்தினரை நோக்கிக் கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. அதில் மூத்த குடி மகன் ஒருவருக்கு தலையிலும் 12-வயது சிறுமி ஒருவருக்கு மணிக்கட்டிலும் காயங்கள் ஏற்பட்டன.

ஆயிரம் பேர் கலந்துகொண்ட அந்த செராமாவில் தாம் பேசத் தொடங்கியபோது மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக
லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்  கூறினார். தம்மீதும் கற்கள் விழுந்ததாக அவர் கூறினார்.

கடந்த வார இறுதியில் மலாக்கா, மெர்லிமாவிலும் இதேபோன்றுதான் நடந்தது.டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர்மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன.பண்டார் ஹிலிர் சட்டமன்ற உறுப்பினர் தே கொக் கியுவின் கார் சேதமடைந்தது.காரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

‘கருத்துகளைக் கொண்டு மோதுங்கள்’

மக்கள் கருத்துகளைக் கொண்டுதான் மோதிக்கொள்ள வேண்டுமே தவிர இப்படிப்பட்ட வன்செயல்கள் கூடாது என்று கைரி குறிப்பிட்டார்.

“நேற்றிரவு லெம்பா பந்தாய் நிகழ்வு தொடர்பில் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.அம்னோதான் காரணம் என்று கூறப்படுகிறது. அப்படிக் கூறப்படுவதைக் கடுமையாகக் கருதுகிறேன்.

“அதற்கு யார் காரணம் என்பதைக் கண்டறிய முழுமையாக விசாரணை நடத்தப்படும்.காரணமாக இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக முறையாக நடவடிக்கையும் எடுக்கப்படும்”, என்றவர் உறுதி கூறினார்.

ஒவ்வொரு கட்சியும் செராமாக்களின் அட்டவணையை மாற்றுக்கட்சியினரின் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்துவது நல்லது என்றும் அவர்  நினைக்கிறார். அப்படிச் செய்தால் ஒரே நேரத்தில் வெவ்வேறு கட்சிகளின் நிகழ்வுகள் ஒரே இடத்தில் நடப்பதையும் மோதல்களையும் தவிர்க்கலாம் என்பது அவரின் கருத்து.