பாக் சமாட்: போலீசாருக்கு நல்ல எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை

ஏப்ரல் 28ம் தேதி கடமையில் ஈடுபட்டிருந்த பல போலீஸ்காரர்கள் வழக்கமாக மரியாதையுடன் நடந்து கொள்ளும் போலீஸ்காரர்களிலிருந்து மாறுபட்டிருந்ததை பெர்சே 3.0 பேரணியில் பங்கு கொண்டவர்கள் கண்டனர்.

அந்தப் போலீஸ்காரர்களுடைய சீருடைகளில் வழக்கமாகத் தென்படும் அடையாள எண்களும் பெயர்ப்பட்டையும் காணப்படவில்லை. தங்களை அடித்த போலீஸ்காரர்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்டவர்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

அந்த நிலை பரவலாகக் காணப்பட்டது உயர் அதிகாரிகளுடைய அங்கீகாரத்துடன் அது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாக பெர்சே இணைத் தலைவர் ஏ சமாட் சைட் கூறினார்.

“அவர்களிடம் பெயர்ப் பட்டை இல்லை. அடையாள எண்களும் இல்லை. பல போலீஸ்காரர்கள் அப்படி இருந்தார்கள். தங்களது பெயர்களையும் எண்களையும் போலீஸ்காரர்கள் காட்டவிரும்பவில்லை என்றால் அவர்களுக்கு கெட்ட நோக்கம் இருந்துள்ளது என்றுதான் அர்த்தம்.”

“பலர் அப்படி இருந்ததால் பெரும்பாலும் தேசியப் போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி) என்ற உயரிய அதிகாரி அங்கீகரித்திருக்க வேண்டும். அது ஐஜிபி-க்குத் தெரிந்திருந்தால் உள்துறை அமைச்சரும் அறிந்திருப்பார்,” என மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் பாக் சமாட் கூறினார்.

மாலை 4 மணி என்ற காலக் கெடுவுக்குள் வீட்டுக்குத் திரும்ப மறுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதற்கு போலீசாருக்கு உரிமை உள்ளது எனக் கூறிய அவர், 10 அல்லது அதற்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரை அடித்தால் “ஒர் எருமை கூட சாகக் கூடிய அளவுக்கு” கடுமையாக இருக்கும்,” என்றார்.

போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டாலும் நல்ல வேளையாக அந்தப் பேரணியின் போது உயிரிழப்பு ஏதுமில்லை.

பாக் சமாட் நடத்திய தனி ‘குந்தியிருப்பு போராட்டம்’

பங்சார் உத்தாமாவிலிருந்து தாம் தேசியப் பள்ளிவாசலுக்குச் சென்ற போது போலீசாரை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவர் சொன்னார்.

“நான் பாசார் செனியில் உள்ள எல்ஆர்டி நிலையத்தில் இறங்கிய போது நான் அந்தப் பள்ளிவாசலுக்கு செல்லப் பயன்படுத்தும் பாலத்தை கடந்து செல்ல விரும்பினேன். ஆனால் அன்றைய தினம் டஜன் கணக்கான போலீஸ்காரர்கள் அந்தப் பாதையை அடைத்துக் கொண்டிருந்தனர்.”

“தேசியப் பள்ளிவாசலில் தொழுகையில் கலந்து கொள்வதற்கு நான் பல ஆண்டுகளாக அந்தப் பாதையைப் பயன்படுத்தி வருவதாக நான் அவர்களிடம் கூறினேன். முஸ்லிம்கள் என்ற முறையில் அவர்கள் இன்னொரு முஸ்லிம் தொழுகை நடத்தச் செல்வதைத் தடுக்கக் கூடாது என்று சொன்னேன். என்றாலும் அவர்கள் தொடர்ந்து செல்ல என்னை அனுமதிக்கவில்லை.”

அதனைத் தொடர்ந்து தாம் பாசார் செனிக்கு அருகில் உள்ள பாலத்தில் போலீஸ் நடவடிக்கையை ஆட்சேபித்து தனி மனிதராக குந்தியிருப்பு போராட்டத்தில் இறங்கினேன் என பாக் சமாட் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் அந்த இடத்திலிருந்து எந்தக் காரணமும் இல்லாமல் வெளியேறி விட்டனர். அப்போது அவருடன் பொது மக்களும் அமர்ந்திருந்தனர்.

“நாங்கள் உரையாடினோம். நான் சில கவிதைகளை வாசித்தேன். பின்னர் டாத்தாரான் மெர்தேக்காவுக்கு செல்லுமாறு நான் அவர்களுக்கு அறிவுரை கூறினேன்,” என கூறிய சமாட் அடுத்து தேசியப் பள்ளிவாசலுக்குச் சென்றார். அங்கு தொழுகை நடத்தியதுடன் நிலைமையைக் கண்காணித்து வந்தார்.

அரசாங்கத்தை வீழ்த்துவதே பெர்சே 3.0ன் நோக்கம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர்களும் கூறியுள்ளது பற்றி  கருத்துரைக்குமாறும் பாக் சமாட்-டம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் சிரித்துக் கொண்டே அந்த தனிநபர்கள் “அதிகார வர்க்கத்தின் எஞ்சிய பகுதிகள்” என வருணித்தார்.

‘எங்களிடம் தண்ணீர் போத்தல்கள் தான் இருந்தன”

“அதிகாரத்தை வீழ்த்த வேண்டுமானால் ஆயுதங்கள் வேண்டும். எங்களிடம் தண்ணீர் போத்தல்கள்தான் இருந்தன,” என அவர் சிரித்துக் கொண்டே கூறினார்.

எதிர்காலத்தில் பெர்சே பேரணிகளில் அரசியல்வாதிகளை பேச அனுமதிக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொண்ட அவர் அந்த இயக்கத்தை பக்காத்தான் ராக்யாட் அரசியல்வாதிகள் கடத்தி விட்டதாக கூறப்படுவதை மறுத்தார்.

“நாங்கள் பக்காத்தான், பிஎன் அரசியல்வாதிகளையும் அழைத்தோம். ஆனால் பிஎன் எங்களிடமிருந்து விலகியிருக்க விரும்பியது. ஒரு வேளை அதிகாரத்தில் அது இருப்பது காரணமாக இருக்கலாம். இந்த இயக்கம் அதற்கு நெருடலாக இருக்கக் கூடும்,”என்றார் பாக் சமாட்.

கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மாறாக அரசியல் கட்சிகளுடைய ஆதரவு மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் என அவர் சொன்னார்.

“எந்த இயக்காத்திலும் அது மியன்மாராக, ரஷ்யாவாக, இந்தியாவாக, கிழக்கு ஐரோப்பாவாக அல்லது எங்கு இருந்தாலும் அரசியல் பின்னணியைக் கொண்ட தலைவர்கள் எப்போதும் இருந்துள்ளனர்.”

மலேசியாவில் தங்கள் அதிகாரத்துக்கு மருட்டல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எண்ணியிருக்க வேண்டும். அதனால் பெர்சே-யை வன்முறை இயக்கம் என சித்தரிப்பதற்கு பெரிய இயக்கத்தையே தொடங்கியுள்ளனர்.

“பெர்சே 3.0ல் பங்கு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது இப்போது கவனம் செலுத்தப்படலாம். ஆனால் அவர்களைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு முறையும் அது பெர்சே-யுடன் பிணைக்கப்படும் என்பதையும் அதன் எட்டு தேர்தல் சீர்திருத்தக் கோரிக்கைகளையும் உள்ளடக்கியிருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்,” என பாக் சமாட் குறிப்பிட்டார்.

சர்ச்சைகள் எழுந்த போதிலும்,  மலாய் சமூகம் பெரும்பான்மையாக இருந்த முன்னைய பெர்சே பேரணிகளைப் போல் அல்லாது பெர்சே 3.0ல் எல்லா இனங்களையும் சார்ந்த மக்கள் சம அளவில் கலந்து கொண்டது தமக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் அவர் சொன்னார். 

“பெர்சே 4.0 நடைபெற்றால்-அது நடைபெறும் என நான் சொல்லவில்லை- முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் ஒர் அதிகார வர்க்கம் குண்டர்களைப் பயன்படுத்துவதால் இப்போது மோசமான நிலையில் உள்ளது. அதனால் மலாய்க்காரர் அல்லாதார் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் கலந்து கொள்வர் என நான் நினைக்கிறேன்,” என்றார் பாக் சமாட்.