பெர்க்காசா மே 10 ஆர்ப்பாட்டத்தில் பினாங்கு கிம்மா “சம்பந்தப்படவில்லை”

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வீட்டுக்கு முன்னால் மே 10ம் தேதி பெர்க்காசா நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கிம்மா சம்பந்தப்பட்டுள்ளதாக பினாங்கு மலேசிய இந்தியர் குரல் சங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிம்மா எனப்படும் மலேசிய இந்தியர் முஸ்லிம் காங்கிரஸின் பினாங்குக் கிளை மறுத்துள்ளது.

அந்தத் தகவலை வெளியிட்ட பினாங்கு கிம்மா தொடர்புக் குழுத் தலைவர் பாரூக்  ராஜு முகமட், பினாங்கு மலேசிய இந்தியர் குரல் சங்கத் தலைவர் ஏ சத்தியமூர்த்தி தமது அறிக்கையையும் போலீஸ் புகாரையும் மீட்டுக் கொள்வதோடு அண்மையில் ஊடகங்களுக்கு தாம் விடுத்த அறிக்கைகக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கேட்க வேண்டும் எனச் சொன்னார்.

“நாங்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்படவே இல்லை. சத்தியமூர்த்தி செய்த போலீஸ் புகார் தவறானது. அவ்வாறு செய்ய வேண்டாம் என நான் அவருக்கு எச்சரிக்கிறேன்.”

“இனங்களுக்கு இடையில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவர்கள் அந்த விவகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்,” என ஜார்ஜ் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

லிம் வீட்டு நுழைவாயிலில் மாலை போடப்பட்ட லிம்-மின் படத்தை மாட்டி இந்து ஈமச் சடங்குகள் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கிம்மா உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக சத்தியமூர்த்தி குற்றம் சாட்டியிருப்பதாக அண்மையில் தமிழ் நாளேடு ஒன்றி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சத்தியமூர்த்தியின் நடவடிக்கை சுய நன்மைக்காக மலிவாக விளம்பரம் தேடும் முயற்சி என்றும் பாரூக் வருணித்தார்.

ஆகவே சத்தியமூர்த்தி மன்னிப்புக் கேட்க மறுத்து, தமது அறிக்கையையும் கிம்மாவுக்கு எதிராக சமர்பித்த போலீஸ் புகாரையும் மீட்டுக் கொள்ளத் தவறினால் தமது கட்சி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

மே 10ம் தேதி, பினாங்கு மக்களுடைய நலன்களை லிம் பாதுகாக்கத் தவறி விட்டதால் அவர் பதவி துறக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் வீட்டுக்கு முன்பும் கொம்தார் கட்டிடத்துக்கு முன்பும் 70க்கும் மேற்பட்ட பெர்க்காசா உறுப்பினர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

பெர்னாமா