வியாழக்கிழமை, லெம்பா பந்தாய் பக்காத்தான் செராமா நிகழ்வில் குழப்பம் ஏற்படக் காரணமாக இருந்தவர் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என்று லெம்பா பந்தாய் அம்னோ குற்றம் சாட்டியுள்ளது.
“அன்றிரவு அன்வார் தம் உரையில் ‘Pemuda Umno sial , Pemuda Umno celaka’என்று (அம்னோ இளைஞர் பகுதியை) திட்டினார்.அப்போது அம்னோ இளைஞர் பகுதியும் சில இளைஞர் என்ஜிஓ-களும் தேர்தல் கூட்டம்போன்ற பாவனைக் கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தன.
“அப்படிப்பட்ட வேளையில் இப்படி உசுப்பிவிடுவதுபோல் பேசினால் என்ன நடக்கும்?”, என லெம்பா பந்தாய் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் முகம்மட் சஸாலி கமிலான் வினவினார்.அவர் இன்று காலை பங்சாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
வியாழக்கிழமை இரவு பந்தாய் டாலாமில் பக்காத்தான் செராமா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அதை நோக்கிப் பல பொருள்கள் வீசப்பட்டதில் பலர் காயமடைந்தனர்.பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த அம்னோ கூட்டத்திலிருந்துதான் அவை வீசப்பட்டதாகக் கூறப்பட்டது.
முதியவர் ஒருவர் காயமடைந்தது இரத்தம் கொட்டுவதைப் பார்த்த பின்னரே அன்வார் அப்படிக் கூறினார் என்று சுட்டிக்காட்டியதற்கு தங்களாலும் அப்படிக் கூறிக்கொள்ள முடியும் என்று லெம்பா பந்தாய் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் இப்ராகிம் தம்பி சிக் கூறினார்.
‘அம்னோ ஆதரவாளரும் காயமடைந்தார்’
“ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் (பக்காத்தான் ஆதரவாளர்கள்)தான் முதலில் வீசினார்கள் என்று நான் சொன்னால் என்ன செய்வீர்கள்?”, என்று அம்னோ ஆதரவாளர் ஒருவர் காயமடைந்து அம்னோ கொடியால் காயத்துக்குக் கட்டுப்போடப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் இரண்டு படங்களைக் காண்பித்தார்.
“அன்றிரவு நிறைய பேர் அங்கிருந்தனர்.அம்னோ ஆள்கள் இருந்தனர்.அவர்களின் ஆள்களும் நிச்சயம் இருந்திருப்பார்கள். யார் எதை, யார்மீது வீசினார்கள் என்பதெல்லாம் தெரியாது.
“அதனால், யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை…..பிகேஆர் (பொருள்களை) வீசியதாகச் சொல்ல மாட்டோம். நாங்கள் நல்லவர்கள்.அவர்களைக் குறை சொல்ல மாட்டோம்”.
‘அம்பிகாவாலும் அன்வாராலும் பயிற்றுவிக்கப்பட்ட காலிக்கூட்டம்’
லெம்பா பந்தாய் அம்னோவை வன்செயலில் ஈடுபட்டதாகக் கூறும் பிகேஆர், ஏப்ரல் 28-இல் பெர்சே 3.0 பேரணியில் அது எப்படி நடந்துகொண்டது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று இப்ராகிம் கூறினார்.
“அம்னோ இளைஞர்கள் வன்செயலில் ஈடுபட்டதாகக் கூறுகிறார்களே….நான் நினைக்கிறேன்.அவர்களுக்கு(பக்காத்தான் ஆதரவாளர்கள்)அம்பிகா ஸ்ரீநிவாசான் நன்றாக பயிற்சி கொடுத்திருக்கிறார் என்று. பெர்சே 3.0-இல் அதைத் தெளிவாகப் பார்த்தோம்.
“அவர்கள்தான் போலீசைத் தாக்கினார்கள், மக்களைத் தாக்கினார்கள், அரசாங்கச் சொத்துக்களைச் சேதப்படுத்தினர்.அவர்கள் அம்னோ ஆள்கள் அல்லர்.அம்பிகாவிடமும் அன்வாரிடமும் பயிற்சி பெற்றவர்கள்”, என்றாரவர்.
அண்மைக்காலமாக பிஎன் ஆதரவாளர்கள் எதிர்-ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள் என்றால் அதற்கு பெர்சே 3.0 வன்செயல்கள்கூட ஒரு தூண்டுதலாக இருக்கலாம் என்றாரவர்.
இப்படி ஆர்ப்பாட்டங்களும் எதிர்-ஆர்ப்பாட்டங்களும் தொடர்வது தேவைதானா என்று அவரிடம் வினவப்பட்டது.
இந்தக் கேள்வியை அன்வாரிடம் கேளுங்கள் என்றார்.
அவரிடம் பின்னர் கேட்போம். இப்போது உங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு,“முதலில் அவரிடம் கேளுங்கள், அப்புறம் வாருங்கள். நான் பதில் சொல்கிறேன்”, என்று இப்ராகிம் கூறினார்.