வியாழக்கிழமை செராமாவில் குழப்பம் தோன்றக் காரணம் பிகேஆரின் சினமூட்டும் பேச்சுத்தான் என்று அம்னோ கூறியிருப்பதை மறுக்கும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்,அதற்கு காணொளி சான்று இருப்பதாகக் கூறுகிறார்.
செராமாவில் செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்களின் வீடீயோ படங்களில், முட்டைகளும் கற்களும் வீசப்பட்டது உள்பட எல்லாமே பதிவாகியுள்ளது என்றாரவர்.
“காணொளிப் பதிவுகளே சிறந்த சான்றாகும்”, என்று நுருல் இஸ்ஸா கூறினார்.
“இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உம்மி ஹபில்டாவும் மற்ற பேச்சாளர்களும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றி இழிவான மொழியில் கரித்துக் கொட்டினார்கள்.நாங்கள் எதுவுமே சொல்லவில்லை.
“அதுவெல்லாம் பதிவாகியுள்ளது.எல்லாரும் பொறுமை காக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டுக்கொண்டோம்”, என்றாரவர்.
இன்று காலை லெம்பா பந்தாய் அம்னோ, செராமாவில் குழப்பம் ஏற்படக் காரணமாக இருந்தவர் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என்று குற்றம் சாட்டியிருந்தது.
அன்வார் தம் உரையில் ‘Pemuda Umno sial , Pemuda Umno celaka’என்று திட்டினார் என்று அது கூறியது.
ஆனால், அன்வார் பேசுவதற்குமுன்பே கற்களும் முட்டைகளும் வீசப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.