கடந்த சனிக்கிழமையன்று மலாக்கா பாஸ் ஆதரவாளர்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்து நிகழ்வின் போது நிகழ்ந்த குழப்பம் மீது கோலாலம்பூரில் உள்ள ஜாலான் பண்டார் போலீஸ் நிலையத்தில் அதன் தலைவர் ராஜா சண்முகம் புகார் செய்துள்ளார்.
தாம் உள்ளூர் போலீசை நம்பாததால் கோலாலம்பூரில் புகார் செய்ததாக ராஜா தெரிவித்தார்.
“மெர்லிமாவ் போலீஸும் அம்னோவும் சகோதரர்களைப் போன்றவர்கள் என நான் கருதுகிறேன். அதனால் நான் என் புகாரைக் கோலாலம்பூரில் சமர்பிக்க முடிவு செய்தேன்,” என்றார் அவர்.
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்காக திட்டமிடப்பட்டிருந்த தேநீர் விருந்துக்கு எதிராக உள்ளூர் அம்னோ, பெர்க்காசா கிளைகள் நடத்திய ஆர்ப்பாட்டம் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறுகின்றது என ராஜா தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதர பல விஷயங்களுடன் சாலை ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்யும் அந்தச் சட்டத்தின் 4வது பிரிவை அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டவர்கள் மீறியுள்ளதாக வழக்குரைஞருமான ராஜா தெரிவித்தார்.
போலீசார் கூட்டத்தைக் கலைப்பதற்கான அதிகாரங்களைப் பயன்படுத்தவில்லை
“அந்த ஒன்று கூடல் சாலை ஆர்ப்பாட்டமாக இருந்தால் அல்லது அவ்வாறு மாறினால் அதனைக் கலைப்பதற்கு அந்தச் சட்டத்தின் 21வது பிரிவை போலீசார் பயன்படுத்தத் தவறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் “பொது அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது பொது மக்களிடயே பகைமை, வெறுப்புணர்வு அல்லது தீய எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடிய” அறிக்கைகளை வெளியிட்டால் அவர்களைக் கலைப்பததற்கு அந்தப் பிரிவு அனுமதி அளிக்கிறது.
அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜாலான் மெர்லிமாவ்/ஜாலான் பத்து காஜா ஆகியவற்றில் மோட்டார் ஒட்டிகளை தடுத்ததுடன் ஏளனமும் செய்துள்ளதுடன் தாமான் ஸ்ரீ மெர்லிமாவில் நிகழ்வு நடக்கும் இடத்தை நோக்கி ஊர்வலமாகவும் சென்றுள்ளதாகவும் ராஜா குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு கூட்டம் சீராக நடைபெறுவதற்கு” “அவசியமானது எனக் கருதப்படும்” எந்த நடவடிக்கையை எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் தங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் 8வது பிரிவையும் போலீஸ் அமலாக்கத் தவறி விட்டதாகவும் அவர் சொன்னார்.
பொது ஒழுங்கை நிலை நிறுத்தவும் மற்றவர்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கவும் “கட்டுப்பாடுகளை விதிக்க” போலீசை அனுமதிக்கும் 15(1)வது பிரிவும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜா சொன்னார்.
ருக்குன் நெகாரா அலட்சியம் செய்யப்பட்டுள்ளது
ருக்குன் நெகாரா குறிப்பாக மரியாதை தார்மீகம் ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதி அலட்சியம் செய்யப்பட்டுள்ளது என்றும் ராஜா புகார் செய்துள்ளார்.
“நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குள் நுழைய விரும்புகின்ற மக்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேலி செய்துள்ளனர். சீன வம்சாவளி பங்கேற்பாளர்கள் நாய்கள் என்றும் இந்தியர்கள் பறையா என்றும் அழைக்கப்பட்டனர்,” என அவர் மேலும் கூறினார்.
மே 13ம் தேதி ரத்தக் களரி சம்பவத்துக்குப் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட ருக்குன் நெகாரா கோட்பாடு, குறிப்பாக இன்னொரு இனக் கலவரத்தைத் தடுப்பதற்கு இது போன்ற விஷயங்களில் பின்பற்றப்பட வேண்டும் எனவும் ராஜா குறிப்பிட்டார்.