ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது சட்டத்தை மீறியதாக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, ரெம்பாவ் பிகே ஆர் கிளைத் தலைவர் பாத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
பேரணி பங்கேற்பாளர்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த கம்பி வேலிகளை தகர்க்குமாறு தங்கம் ராஜு, ராஜேஷ் குமார், பர்ஹான் இப்ராஹிம் ஆகியோரைத் தூண்டி விட்டதாகவும் அந்த மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அவர்கள் மறுத்து விசாரணை கோரியுள்ளனர். இவ்வாண்டு நடப்புக்கு வந்த அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் (பிஏஏ) குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலாவது நபர்கள் அவர்கள் ஆவர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் போதுமானவை அல்ல என அன்வார் கருதினால் அன்வார் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள வேண்டும் என செல்வாக்குமிக்க அனைத்துலக நிதி சஞ்சிகையான வால் ஸ்டீரிட் ஜேர்னல் கருத்துத் தெரிவித்துள்ளது.
அந்த விவகாரம் தொடர்பில் அந்த சஞ்சிகை வெளியிட்டுள்ள கட்டுரையின் தலைப்பு ‘மலேசிய மக்கள் நீதிமன்றம், அன்வாருடைய சிவில் ஒத்துழையாமை, அடுத்த பொதுத் தேர்தல்” என்பதாகும்.
பிபிஏ சட்டம் நியாயமற்ற சட்டம் என என்பதை மக்கள் உணர வைப்பதற்கு குற்றத்தை ஒப்புக் கொண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அபராதத்தை செலுத்துவதுதான் அன்வாருக்கு மிகவும் நேரடியான வழி என அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகளில் உண்மையான தீர்ப்பு
அந்தக் கட்டுரை கடந்த வியாழக் கிழமை “ஆசிய மறு ஆய்வு, கண்ணோட்டம்” பகுதியில் வெளியாகியுள்ளது. அந்த அரசியல்வாதியின் கடந்த காலச் சட்டப் போராட்டங்களை-இரண்டு குதப்புணர்ச்சி குற்றச்சாட்டுக்கள் மீது விசாரிக்கப்பட்டது, இரண்டு முறை விடுவிக்கப்பட்டது- ஆகியவற்றைப் பரிசீலிக்கும் போது இதுவும் அரசியல் நோக்கம் கொண்ட வழக்கு என ஒருவர் கருதக் கூடும்.
“ஆனால் இந்த வழக்கு மாறுபட்டது. அன்வார் சிவில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துகிறார். அதற்கு அவர் இப்போது விலை கொடுக்கிறார்.”
உண்மையான தீர்ப்பு இவ்வாண்டு பிற்பகுதியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் அடுத்த பொதுத் தேர்தலில் தான் வழங்கப்படும். பிரதமர் நஜிப் ரசாக்கின் அரசியல் சீர்திருத்தங்கள் பொருத்தமான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றனவா அல்லது விரைவான மாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் திரு அன்வார் சரியா என்பதை அப்போது வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
அந்த சஞ்சிகை மேலும் எழுதுகிறது: “அன்வார் சிவில் ஒத்துழையாமை இயக்கத்தைப் பின்பற்ற விரும்பினால் அதே வேளையில் தாம் எந்தக் குற்றமும் செய்யாதவர் என பாசாங்கு செய்யவும் முடியாது”
“பல நகர்ப்புற, நடுத்தர வர்க்க மலேசியர்கள் கோலாலம்பூர் அரை மனதுடன் அமல் செய்யும் சீர்திருத்தங்களில் மகிழ்ச்சி அடையாததால் கடந்த மாதம் பெர்சே பேரணி நடைபெற்றது.”
நஜிப் குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் தடுத்து வைக்கப்படுவதற்கு வகை செய்யும் ஒடுக்குமுறையான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல சட்டங்களை மாற்றி வருகிறார். ஆனால் அவற்றுக்குப் பதில் அந்தக் கொடுமையான நடவடிக்கைகளை இன்னும் உள்ளடக்கிய பகுதி பகுதியான மாற்றங்களை அவர் அறிமுகம் செய்துள்ளார்.
நஜிப் மேற்கொள்ளும் சீர்திருத்தங்களுக்காக அவரை பாராட்ட வேண்டியது அவசியமாகும். அதே வேளையில் அவை போதுமானவை அல்ல என எதிர்க்கட்சிகள் குறை சொல்வதற்கும் நல்ல காரணங்கள் உள்ளன என்றும் வால் ஸ்டிரீட் ஜேர்னல் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
“மலேசிய சமூகத்துக்கு மாற்றங்கள் துரிதமான வேகத்தில் வழங்கப்படுவது நல்லதா அல்லது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு உபாயங்கள் நல்லதா என்பதே உண்மையான கேள்வி ஆகும்.”
பெர்னாமா