போட்டி செராமாக்கள் கலவரத்தையே கொண்டு வரும் என்கிறார் முன்னாள் ஐஜிபி ஒருவர்

ஒரு செராமா நிகழும் இடத்திற்கு அருகிலேயே போட்டி செராமா நடத்த அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிப்பது கலவரத்தை அழைப்பதற்கு ஒப்பாகும் என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசான் கூறுகிறார்.

“அது அனுமதிக்கப்படக் கூடாது. என்னைப் பொறுத்த வரையில் அதனைச் செய்யக் கூடாது. அது தகராற்றைத் தொடங்குவது என அழைக்கப்படும் செராமாவுக்குப் போவது அல்ல.”

“அருகிலேயே அதனைச் செய்ய வேண்டாம். நீங்கள் அருகில் அதனைச் செய்தால் மோதல்கள் நடக்கும்,” என மலேசியாகினிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறினார்.

அத்தகைய சூழ்நிலை பூசல் உருவானால் சிக்கல்கள் ஏற்படும். காரணம் பூசலுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பது சிரமமாகி விடும்.”

“அந்தத் தாக்குதலை நடத்தியவர்கள், அதற்குப் பின்னால் எதிரணியில் இருப்பவர்கள் இருப்பதாகச் சொல்வார்கள். வேறு யாராவது கூட அதனைச் செய்து விட்டு மற்றவர் மீது கூட பழி போடலாம்… நமக்கு அது யார் எனத் தெரியாது. ஆகவே அது தான் பிரச்னை,” என மூசா சொன்னார்.

போலீசார் தலையிட வேண்டுமா எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது மூசா, தங்களது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது செராமாக்களில் கலந்து கொள்கின்றவர்களைச் சார்ந்துள்ளது என்றார்.

“ஒரு செராமாவைக் கூட காவல் புரிவதற்குப் போலீஸ் தேவைப்படும் நாளைக் காண நாம் விரும்பவில்லை. செராமாக்களுக்குக் கூட போலீஸ் காவல் தேவை என்றால் நாம் எப்படி நமது நாட்டை அமைதியான நாடு என அழைத்துக் கொள்ள முடியும்,” என்றார் அந்த முன்னாள் ஐஜிபி

அரசியல் உணர்வுகளுக்கு பலியாக வேண்டாம் என அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

“இது ஜனநாயக நாடு. யாரும் யாரை வேண்டுமானாலும் குறை கூறலாம். நீங்கள் அதற்காக கோபப்படக் கூடாது. உங்கள் ஆத்திரத்தை வன்முறை வழி வெளிப்படுத்தக் கூடாது.”

கடந்த வியாழக்கிழமையன்று அம்னோவும் பிகேஆரும் நடத்திய செராமாக்களின் போது அடுத்ததரப்பிலிருந்து பொருட்கள் வீசப்பட்டதாக ஒன்றையொன்று குற்றம் சாட்டிக் கொண்டுள்ளன.

அந்தச் சம்பவத்தில் பக்காத்தான் ஆதரவாளர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. 12 வயது சிறுமிக்கு செங்கல் தாக்கியதால் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே வீசப்பட்ட பொருள் ஒன்றினால் தனது ஆதரவாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக இன்று லெம்பா பந்தாய் அம்னோவும் கூறிக் கொண்டுள்ளது.