ஒருவர் பிரதமராவதற்கு இனம் ஒரு பிரச்னையாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் முஸ்லிமாக இருந்தால் போதும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார்.
அந்தத் தலைவர் முஸ்லிம்களிலிருந்து வர வேண்டும். ஏனெனில் அவர் அரசாங்கத்துக்கு தலைமை தாங்கப் போகிறார். இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களை வழி நடத்தப் போகிறார் என நிக் அஜிஸ் சொன்னார்.
“மலாய்க்காரர் அல்லாத ஒருவர் கூட இருக்கலாம். ஆனால் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும். அவர் முஸ்லிமாக இல்லை என்றால் அவர் எப்படி முஸ்லிம்களை வழி நடத்த முடியும் ? ஜனநாயக நாடு ஒன்று அந்தப் பதவியைக் கம்யூனிஸ்ட் ஒருவருக்குக் கொடுக்க முடியுமா ?”
“அதே போன்று ஒரு கம்யூனிஸ்ட் நாடும் ஜனநாயகத் தலைவரை ஏற்றுக் கொள்ளுமா ? நிச்சயம் நடக்காது ! கம்யூனிஸ்ட் நாட்டுக்கு ஒரு கம்யூனிஸ்ட்காரரே தலைமை தாங்க வேண்டும். ஜனநாயக நாடு ஒன்றை ஜனநாயகத் தலைவர் ஒருவரே வழி நடத்த வேண்டும்,” என்றார் அவர்.
“ஆகவே ஒரு முஸ்லிம் நாட்டை இனத்தைக் கருதாமல் ஒரு முஸ்லிமே வழி நடத்த வேண்டும்.”
கிளந்தான் பாஸ் உலாமா பேரவையை மாச்சாங்கில் இன்று லாபோக் தேவான் உலாமா தலைமையகத்தில் தொடக்கி வைத்த பின்னர் நிக் அஜிஸ் நிருபர்களிடம் பேசினார்.
இந்த நாட்டின் மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராவதற்கு எதிராக சட்டம் ஏதுமில்லை என்ற அடிப்படையில் தாம் மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராவதை உறுதி செய்வதற்குத் தாம் தொடர்ந்து போராடப் போவதாக டிஏபி தலைவர் கர்பால் சிங் ஏற்கனவே கூறியுள்ளார்.
பெர்னாமா