பெர்சே 3.0 இணைத் தலைவர் எஸ் அம்பிகாவுக்கும் அவரது இதர 9 குழு உறுப்பினர்களுக்கும் எதிராக மலேசிய அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கிற்கு சட்ட அடிப்படை இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய இயலும் என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.
அந்த வழக்கிற்கு சட்ட அடிப்படை இல்லை என்றும் அதனால் அது மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் செய்தி இணையத் தளம் ஒன்றின் வழி விடுத்துள்ள அறிக்கை பற்றி கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அவர் அவ்வாறு கூறினார்.
“தங்களுக்கு எதிராக குற்றம் புரியப்பட்டுள்ளது என எந்தத் தரப்பும் கருதினால் அதன் தொடர்பில் வழக்குப் போடுவதற்கு அனுமதிக்கும் சட்ட முறையை இந்த நாடு கொண்டுள்ளது,” என கோலா கங்சாரில் இன்று நிருபர்களிடம் கூறினார்.
அவர் அதற்கு முன்னதாக 2012ம் ஆண்டுக்கான பேரா வருகை ஆண்டை ஒட்டி சுங்கை பேராக் ஆற்றில் படகுப் பயணத்தைத் தொடக்கி வைத்தார்.
ஏப்ரல் 28 பேரணியைக் கட்டுப்படுத்த தவறியதால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்டதாகக் கூறி அரசாங்கம் அண்மையில் அம்பிகா, மரியா சின் அப்துல்லா, ஜைட் கமாருதின், ஹாரிஸ் பாத்தில்லா முகமட், கே ஆறுமுகம், எஸ் அருள் பிரகாஷ், வோங் சின் ஹுவாட், டாக்டர் அகமட் பாரூக் மூசா, தோ ஹின் வூன், அண்ட்ரூ கூ ஆகியோர் மீது அண்மையில் வழக்குத் தொடர்ந்தது.
போலீஸ் வாகனங்களுக்கு ஏற்பட்ட பழுதுகளுக்காகவும் இதர செலவுகளுக்காகவும் நீதிமன்றம் பொருத்தமானது எனக் கருதும் நிவாரணங்களுக்காகவும் அரசாங்கம் சிறப்பு இழப்பீடாக 122,000 ரிங்கிட்டையும் கோரியுள்ளது.
பெர்னாமா