மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட பெர்சே பேரணி 3.0 நடந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ளதை ஒட்டி நேற்றிரவு போராளிகள் மெழுகுவர்த்தி விழிப்பு நிலையை அனுசரித்தனர்.
கடந்த ஒரு மாதமாக அரசாங்கம் அச்சத்தை மூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அவர்கள் அனைவரும் கருதுகின்றனர்.
கோலாலம்பூர் பூமலையில் உள்ள பஸ் நிறுத்துமிடத்தில் நிருபர்களிடம் பேசிய பெர்சே வழி காட்டல் குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா, ஏப்ரல் 28 பேரணிக்குப் பின்னர் பெர்சே குழு உறுப்பினர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் “வேட்டையாடுவதில் அரசாங்கம் முழு மூச்சாக இறங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.
தேடப்படுவோர் பட்டியலில் தங்கள் பெயர் இருந்ததால் சரணடைந்தவர்களை துன்புறுத்தும் இன்னொரு சுற்று முரட்டுத்தனத்தை போலீஸ் தொடங்கியுள்ளது கண்டு பெர்சே கூட்டணி அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர் சொன்னார். எடுத்துக்காட்டுக்கு அவர் முகமட் சபுவான் மாமாட் விவகாரத்தைக் குறிப்பிட்டார்.
“நீங்கள் சரணடையும் போது அவர்கள் உங்கள் அடிப்பார்கள் என நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். ஆனால் அந்த விவகாரத்தில் அப்படி நடக்கவில்லை.”
“தேடப்படுவோர் பட்டியலில் உள்ள 141 பேர்களில் 36 பெயர்களை மட்டுமே அவர்கள் வெளியிட்டுள்ளனர். மற்ற 100 பேர், யார் அவர்கள் ?”
“பொது மக்களிடையே அச்சத்தை மூட்டுவது தான் அவர்களின் நோக்கம்,” என்றார் மரியா சின்.
மரியாவின் கருத்துக்களை ஒப்புக் கொண்ட சுவாராம் நிர்வாக இயக்குநர் இ நளினி, அச்சத்தை ஏற்படுத்துவதற்கு தீவிரமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், துணிச்சலான புதிய தலைமுறை ஒன்றை உருவாக்க உதவியுள்ளதாகச் சொன்னார்.
“அவர்கள் அச்சத்தை மூட்டும் வேளையில் மக்கள் தங்கள் உரிமைகளை அறியத் தொடங்கியுள்ளனர். சட்ட ஆலோசனைக்காக மக்கள் அன்றாடம் எங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.”
“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பேர் துணிச்சலாக சாட்சியமளிக்க முன் வந்திருக்க மாட்டார்கள். ஆனால் பெர்சே அவர்களுக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது,” என்றார் நளினி.
பெர்சே 2.0, பெர்சே 3.0 பேரணிகளை ஒப்பு நோக்கிய பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன், இந்த முறை மட்டுமே அரசாங்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முயலுகிறது என்றார்.
“ஏற்கனவே பேரணி நடந்த பின்னர் அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைத்தது. ஆனால் இந்த முறை அது சீர்திருத்தங்களை செயல்படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை.”
“அது எதிர்த் தாக்குதலில் ஈடுபட முனைந்துள்ளது. மக்கள் அச்சம் கொள்வர் என எண்ணி தேடப்படுவோர் பட்டியலையும் படங்களையும் வெளியிடுகிறது. அச்சத்தைப் பரப்புகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
போலீஸ் சீர்திருத்தங்கள் கோரி புதிய இயக்கம்
பெர்சே 3.0 பேரணியின் ஒரு மாத நிறைவை ஒட்டி போலீஸ் முரட்டுத்தனத்தைக் கண்டிக்கும் வகையில் நடத்தப்ப்பட்ட ஒரு மணி நேர மெழுகுவர்த்தி விழிப்பு நிலையில் பங்கு கொண்ட 30 பேரில் அந்த மூவரும் அடங்குவர்.
“போலீஸ் நடு நிலையாக இருக்க வேண்டும். அரசியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும்”, பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் அதற்கு நேர்மாறாக அல்ல,” எனக் கூறும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளையும் அவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.
“நல்ல போலீஸை நாங்கள் விரும்புகிறோம். கெட்ட போலீஸை நாங்கள் கண்டிக்கிறோம்” என்றும் அவர்கள் முழங்கினர்.
“100 விழுக்காடு வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதை” வலியுறுத்தும் இயக்கத்தை அடுத்த மாதம் கெடா, திரங்கானு போன்ற மாநிலங்களில் பெர்சே மீண்டும் நடத்தும் என்ற தகவலையும் மரியா அப்போது வெளியிட்டார்.
பெர்சே தனது முக்கியமான கோரிக்கைகள் மீது மக்கள் மீண்டும் கவனம் செலுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதோடு வாக்களிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை கிராமப்புற மக்களுக்கு உணர்த்துவதற்கும் பாடுபடும் என்றார் அவர்.
இதனிடையே போலீஸ் படையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனக் கோரி புதிய இயக்கம் தொடங்கப்படும் என நளினியும் அருட்செல்வனும் கூறினர். அந்தச் சீர்திருத்தங்களில் நீண்ட காலத்துக்கு முன்பு கைவிடப்பட்ட போலீஸ் புகார்கள், தவறான நடத்தைகள் மீது சுயேச்சை ஆணையத்தை அமைப்பதும் அடங்கும்.