ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அடிக்கப்படக் கூடாது என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறுகிறார்.
கடந்த மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுவது மீது கருத்துரைத்த போது அவர் அவ்வாறு சொன்னார்.
“போலீசாருக்கு எதிராக படைபலம் அல்லது போலீசார் மருட்டலுக்கு இலக்காகும் போது மட்டுமே படைபலம் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் போலீசார் அவர்களை தாக்குவது, அனுமதிக்கப்படவில்லை. அது சட்டப்படி தவறாகும்,” என மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் மூசா தெரிவித்தார்.
என்றாலும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் போலீசார் “நியாயமான படைபலத்தை” பயன்படுத்தலாம்என்றார் அவர். அதற்காக அவர்கள் மீது வழக்குப் போட முடியாது.
“கலவரம் ஒன்றின் போது அமைதியை நிலை நிறுத்துவதற்கு போலீசார் நியாயமான படைபலத்தைப் பயன்படுத்துவதற்கு குற்றவியல் சட்டத்தின் 84வது பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைக்காக அந்த போலீஸ்காரர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட முடியாது என்றும் அந்தப் பிரிவு கூறுகிறது.”
“பெர்சே 3.0ஐ பொறுத்த வரையில் கார்கள் கவிழ்க்கப்பட்டுள்ளன. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அது அமைதியான கூட்டம் அல்ல. அது கலவரமாகக் கருதப்பட வேண்டும்,” என்றார் மூசா.
பத்திரிக்கையாளர்களைப் பொறுத்த வரையில் அவர்களை பிரித்து பாதுகாப்பான இடத்தில் வைப்பது நல்லது என்றார் அந்த முன்னாள் ஐஜிபி.
“ஆனால் நம்மைப் பின் தொடரப் போவதாக பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தினால் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.”
ஒளிபதிவு சாதனங்களுக்காக பத்திரிக்கையாளர்கள் மீது வேண்டுமென்றே குறி வைத்துத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிக் கருத்துரைத்த அவர்,” அது வழி அல்ல. அது சரியல்ல. அவ்வாறு செய்யுமாறு உத்தரவிடப்பட்டதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. நான் இப்போது போலீஸ் படைக்கு வெளியில் இருக்கிறேன்,” என்றார்.
‘பெயர்ப் பட்டை இல்லாத போலீசார் முன்பு நிகழ்ந்தது இல்லை’
பெர்சே 3.0 பேரணியின் போது கடமையில் இருந்த பல போலீஸ் அதிகாரிகளும் வீரர்களும் தங்களது பெயர்ப் பட்டைகளையும் எண்களையு மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்தும் மூசா கருத்துரைத்தார்.
தாம் பதவியில் இருந்த காலத்தில் இது போன்று நிகழ்ந்தது இல்லை என்று அவர் சொன்னார்.
“அது ஒரு நடவடிக்கையாக இருந்தால் அவர்கள் தங்கள் பெயர்ப் பட்டைகளை அணிந்திருக்க வேண்டும். எண் பட்டை இல்லை என்றாலும் அவர்களது சீருடைகளில் பெயர்ப் பட்டை இருக்க வேண்டும். Federal Reserve Unit என்ற கலகத் தடுப்புப் போலீசார் கூட அவற்றை அணிந்திருக்க வேண்டும்,” என்றும் மூசா வலியுறுத்தினார்.
பெர்சே 3.0 பலத்தின் மூலம் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சி என தாம் ஏற்கனவே கூறியதை அவர் அந்தப் பேட்டியிலும் மீண்டும் வலியுறுத்தினார்.
“சூழ்நிலையைப் பாருங்கள், PTPTN எதிர்ப்புக் குழு அங்கு இருந்தது. அவர்கள் எத்தனை நாட்களுக்கு அங்கு இருந்தார்கள் ? அவர்கள் எண்ணிக்கை சிறியது தான், ஆனால் நீங்கள் அதனை அதிக எண்ணிக்கை கொண்ட பெர்சேயுடன் அதனை விரிவு செய்தால்… அதனைத் தொடர்ந்து மே முதல் தேதி தொழிலாளர் தினம். எதுவும் நடக்கலாம்.”
“கம்யூனிசம் பலவீனமடைந்துள்ள போதிலும் மற்ற பெரும் கூட்டம் காரணமாக பெர்சே 3.0க்குள் மற்ற தீவிரவாதச் சக்திகள் ஊடுருவக் கூடும்.”
“ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்கள் தேர்தல் ஆணையத்தை தூய்மைப்படுத்துவது, ஜனநாயகத்துக்கு போராடுவது ஆகியவற்றில் உண்மையாக இருக்கலாம். ஆனல் இதர நோக்கங்களைக் கொண்டவர்களும் அங்கு இருக்கக் கூடும்,” என்றும் மூசா குறிப்பிட்டார்.
கம்யூனிசம் ஒரு சித்தாந்தம் என்றும் அது எதிர்காலத்தில் மீண்டும் தலைதூக்கக் கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.