மூசா ஹசான் போலீஸ் படைத் தலைவராக(ஐஜிபி) இருந்தபோது ஒரு பயம் அவரை விரட்டிக்கொண்டே இருந்தது-பணம் படைத்த குண்டர் கும்பல்கள் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு செயல்படுவார்களோ என்ற பயம்தான் அது.
“காட்பாதர்” படங்களைச் சுட்டிக்காட்டிய அவர் அவற்றில் மாஃபியா கும்பல் அரசியல்வாதிகளையும் சட்ட அமலாக்கத் துறையினரையும் கைக்குள் போட்டுக்கொண்டு செயல்பட்டதை விவரித்தார்.
“அதற்குத் தீர்வுகாண அவர்களுக்கு(அமெரிக்காவுக்கு) பல ஆண்டுகள் ஆனது”, என்று மூசா ஒரு நேர்காணலில் கூறினார். அதேபோன்றதொரு நிலை, மலேசியாவுக்கு வந்துவிடக்கூடாதே என்று 2006-இலிருந்து நான்காண்டுகள் போலீஸ் படைத் தலைவராக இருந்தபோது மூசா மிகவும் வேண்டிக்கொண்டார்.
போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், சூதாட்ட மையங்கள், கருப்புப்பணத்தை வெள்ளையாக்குதல் எனப் பலவழிகளில் பணபலம் பெற்றுள்ள இரகசிய கும்பல்கள் அதிகாரிகளை வளைத்துப்போடும் ஆற்றல் பெற்றிருப்பதாக மூசா கூறினார்.
“அவர்கள்(குண்டர்கள்) அரசியல்வாதிகளுடன் உறவு வைத்துக்கொள்வார்கள் என பயந்தேன்.அரசியலில் சம்பந்தப்பட்டால் அரசியல்வாதிகளையும் சட்ட அமலாக்கத் துறைகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு காரியம் சாதிக்கலாம். அமலாக்கத் துறைகளால் உத்தரவுப்படிதான் செயல்பட முடியும்.அவர்களுக்கு எதிராக செயல்பட முடியாது”.
குண்டர்கள் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு செயலபட்டதற்கு உதாரணங்களைக் கூற முடியுமா என்று கேட்டதற்கு மூசா சிரித்தார். பின்னர், சில நேரங்களில் போலீஸ் கைது செய்யும்.உடனே ஓர் அரசியல்வாதி அவரை விடுவிக்குமாறு உத்தரவிடுவார்.அப்படி நடந்தது உண்டு என்றார்.
“கைது செய்யப்பட்டவர் ஒரு அரசியல்வாதியாகக் கூட இருக்க மாட்டார். நான் பதவியில் இருந்தபோதே இது நடந்தது”.அதற்குமேல் கூற அவர் தயாராக இல்லை.
ஜோகூர் போலீஸ் தலைவராக இருந்தபோது, அங்கு குற்றச்செயல்களை ஒடுக்க போதுமான நடவடிக்கை இல்லை என்று குறைகூறப்பட்டதால் குற்றச்செயல்கள் சூதாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடுவோரையும் கடன்முதலைகளையும் பிடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
“குண்டர்களில் சிலர் அரசியல்வாதிகளின் நண்பர்கள் ஆனாலும், நான் கடுமையாக நடந்துகொண்டேன். போலீஸ் வேலையில் அரசியல் குறுக்கீடு கூடாது என்று அவர்களிடம்(அரசியல்வாதிகளிடம்) நேரடியாகவே கூறினேன்”, என்றாரவர்.
“(தப்பிச் சென்றவர்கள் பற்றி) ஒரு பட்டியல் தயாரிக்கச் சொன்னேன்.அவர்கள் திரும்பி வந்தால் பிடிக்க உதவும் என்பதற்காக. என் நடவடிக்கை சிலருக்குப் பிடிக்கவில்லை.எதற்காக போலீஸ் தலைவர் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள்”.
தம் நடவடிக்கை குண்டர்களுடன் நெருக்கமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் பிடிக்கவில்லை என்று மூசா கூறினார்.அதன் விளைவாக தங்களுக்குக் கிடைத்த வந்த கூடுதல் வருமானம் நின்றுபோனதே என்ற ஆத்திரம் அவர்களுக்கு.
அவரது கடுமையான நடவடிக்கையைப் பிடிக்காத சிலர், அவருக்கு இரகசிய கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகக்கூட குற்றம் சுமத்தினார்கள் என மூசா கூறினார்.
2010 செப்டம்பரில் பணி ஓய்வு பெற்ற மூசா போலீஸ் வேலையில் மூன்றாம் தரப்புகளின் தலையீடு இன்றும் இருப்பதாகக் கூறினார்.
“அது இருக்கிறது. நான் அதை அம்பலத்தினேன்.பல அமைச்சர்களிடம்(பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியிடமும்) அது பற்றித் தெரிவித்தேன்….என் நிலைப்பாடு என்னவென்றால் உத்தரவுப்படி நடப்பேன் உத்தரவில்லையா, என் வழியில் செயல்படுவேன்”.
கடன்முதலைகள் பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பது மூசாவுக்குப் பிடிக்காத ஒன்று.வீடுகளுக்குச் சென்று தொல்லை கொடுக்கிறார்கள்.அதை எண்ணி குழந்தைகள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல அஞ்சுகிறார்கள் என்றாரவர்.
18விழுக்காட்டுக்குமேல் வட்டி விதிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
“அவர்கள் 18விழுக்காட்டுக்குமேல் வட்டி விதிக்க முடிகிறது என்றால் அது சட்ட அமலாக்கம் இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது.
“அது இருக்கட்டும், வட்டித் தொழிலுக்கு உரிமம் வழங்குவது யார்.வீடமைப்பு, ஊராட்சி அமைச்சுத்தான் கொடுக்கிறது. அமைச்சில் போலீஸ் அதிகாரிகளும் உண்டு. இருந்தும் பொதுமக்கள் இன்னமும் தொல்லைகளை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்”.