ஜோகூர் சுல்தான் ‘WWW1’ வாகனப் பதிவு எண்ணை 1/2மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலத்தில் எடுத்தார் என்பதை அரசியல்வாதிகளும் பொதுமக்களும் பரவலாகக் குறைகூறியதை அடுத்து தம் தந்தையைத் தற்காக்க முனைந்த ஜோகூர் பட்டத்திளவரசர், தம் குடும்பம் அரசாங்கத்திடமிருந்து பணம் எதையும் பெறுவதில்லை என்று கூறினார்.
அரசாங்கம், ஜோகூர் அரசக் குடும்பத்துக்குக் கொடுக்கும் மான்யம் மொத்தமும் இரண்டு அற நிறிவனங்களுக்குச் செல்வதாக துங்கு இஸ்மாயில் இட்ரிஸ் இப்னி சுல்தான் இப்ராகிம் தம் டிவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.
“அல்மர்ஹும் சுல்தான் இப்ராகிம் காலத்திலிருந்தே ஜோகூர் அரசக் குடும்பம் அரசாங்கத்திடமிருந்து பணம் எதையும் பெறுவதில்லை.இதை மந்திரி புசார் அல்லது அரசு அதிகாரிகளிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
“ஒவ்வொரு மாதமும் சுல்தானான என் தந்தைக்கும் பட்டத்திளவரசரான எனக்கும் ஒதுக்கப்படும் மான்யம் யாயாசான் இஸ்கண்டர், யாயாசான் இப்ராகிம் ஆகிய அற நிறுவனங்களுக்குச் செல்கிறது.மக்களுக்கும் மாநில அரசுக்கும் உதவுவதுதான் அந்த அற நிறுவனங்களின் நோக்கமாகும்.
“நான் ராஜா மூடா(பட்டத்திளவரசர்) ஆனதிலிருந்து அரசாங்கத்தின் பணத்தில் ஒரு காசைக்கூட தொட்டதில்லை.அது என் மக்களின் பணம்.அதனால்,ஆராய்ந்து பார்த்துவிட்டுப் பேசுங்கள்”, என்றாரவர்.
பலரும் பெற விரும்பிய WWW1 என்ற வாகன பதிவு எண்ணை சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மர்ஹோம் சுல்தான் இஸ்கண்டார்(இடம்) ரிம520,000 கொடுத்து வாங்கியுள்ளார்.
WWW1-க்கு முன் மிக அதிகமான விலைக்குப் போன எண் MCA 1.அதற்குக் கொடுக்கப்பட்ட விலை ரிம300,100.
அந்த எண்ணுக்கு சுல்தான் அவ்வளவு விலை கொடுத்தது இணையத்தில் பரவலான குறைகூறலுக்கு இலக்கானது.கடுமையாகக் குறை சொன்னவர்களில் ஒருவர் முன்னாள் பேராக் மந்திரி புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடின், 2009-இல் பேராக் அரசமைப்பு நெருக்கடியின்போது பேராக் சுல்தானுக்கு துரோகம் இழைத்தவர் என அம்னோவால் குற்றம் சாட்டப்பட்டவர்.
அந்த ரிம520,000-ஐ ஜோகூரின் ஏழை மலாய்க்காரர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாம். பரம ஏழைகளுக்கு 20 வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கலாம் என்றாரவர்.
“ஆனால், (பிரதமரின் துணைவியார்) ரோஸ்மா(மன்சூர்) வைர மோதிரத்துக்கு ரிம24மில்லியன் கொடுத்ததுடன் ஒப்பிட்டால் WWW1 வாகனப் பதிவுஎண்ணுகுக் கொடுக்கப்பட்ட விலை பெரிது இல்லைதான்.ஆனால், இவ்வளவு பணம் கொடுத்து வாங்கியதை எப்படி நியாயப்படுத்துவது?தேசிய ஃபாட்வா மன்றம்தான் கூற வேண்டும்”, என்று டிவிட்டரில் கூறியிருந்தார்.