எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மஇகா எடுத்துக்கொண்ட மூன்று ஏக்கர் நிலத்தை திருப்பிக் கொடுக்கக் கோரி ரிபிளேக்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய எழுவரின் உண்ணாவிரதம் இன்று முடிவிற்கு வந்தது. (காணொளி 01) (காணொளி 02)
இந்த உண்ணாவிரதம் முடிவிற்கு வருவதற்கான முதன்மையான காரணம் உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருந்தவர்களின் உடல்நிலையாகும். “மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது” என்று ரிபிளேக்ஸ் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் இன்று காலையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று காலைவரையில் நாதன், லோகநாதன், பழனிவேல், மைக்கல் தமிழரசன் மற்றும் பாலகுமார் ஆகியோர் தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்து இருந்தனர்.
அதே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனை அவர்களில் நால்வர் மருத்துவ உதவி தேவைப்படும் கட்டத்தை எட்டியிருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். லோகநாதன் மட்டுமே தொடர்ந்து அங்கிருந்தார்.
இக்கட்டத்தில் மருத்துவ ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதம் முடிவிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரிபிளெக்ஸ் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் மூன்று முக்கிய அறிவிப்புகளைச் செய்தார்:
“நிலம் பள்ளிக்கு கொடுக்கப்பட்டது என்று தெரியும் வரையில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக கூறப்போவதில்லை; கொண்டாடப்போவதில்லை. மஇகாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை நாங்கள் பக்கத்தான் தலைவர்களிடம் ஒப்படைக்கிறோம்.”
“ஜூன் மாதத்தில் நடைபெறும் மஇகா மத்திய செயலவைக் குழு கூட்டம் நிலத்தை பள்ளிக்கு கொடுக்க வேண்டும். அது நடைபெறவில்லை என்றால், நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம்”, என்று மணிவண்ணன் கூறினார்.
உண்ணாவிரதம் முடிவிற்கு வந்ததற்கு மருத்துவ ஆலோசனைதான் காரணமே தவிர இவ்விரகாரத்தில் மஇகாவுடன் காணப்பட்டுள்ள இணக்கம் அல்ல என்பதை மணிவண்ணன் வலியுறுத்தினார்.
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளியின் நில விவகாரம் உண்ணாவிரதப் போராட்டம் வரையில் வந்ததற்கான பின்னணியை சுபாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா செய்தியாளர்களுக்கு விளக்கினார்.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இழுபறியில் இருந்துவந்த இவ்விவகாரத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்று கூறிய சிவராசா, இன்று காலையில் மஇகாவின் உதவித் தலைவர் எம்.சரவணன் தம்மைத் தொடர்பு கொண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் மஇகாவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில விவகாரம் விவாதிக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறினார்.
நேற்று பிற்பகல் மணி 5.00 க்கு மஇகா உதவித் தலைவரும் கூட்டரசுப் பிரதேச நல்வாழ்வுத்துறை துணை அமைச்சருமான எம்.சரவணன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்திற்குத் “தீர்வு காண்பதற்கான மனோநிலையை அடைந்துள்ளோம். எந்த ரூபத்திலாவது ஒரு மாற்றுவழி காண வேண்டும் என்பதைக் கொள்கை அளவில் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளோம்”, என்று கூறினார்.
இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கவாசகம், நுருல் இஸ்ஸா, எம். மனோகரன் ஆகியோருடன் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் எலிசபெத் ஆகியோரும் இருந்தனர். பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சுரேந்திரனும் உடனிருந்தார்.
“மஇகாவின் ஜூன் மாத முடிவிற்காக காத்திருக்கையில் நாங்கள் இவ்விவகாரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவோம்”, என்று ஆர்.சிவராசா மேலும் கூறினார்.