மஇகா-பிகேஆர் தகராறு குறித்த புலனாய்வை போலீஸ் முடித்துக் கொண்டுள்ளது

மே 2ம் தேதி புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்துக்கு முன்னாள் நிகழ்ந்த மஇகா-பிகேஆர் தகராறு குறித்த புலனாய்வை போலீஸ் முடித்துக் கொண்டுள்ளது

அந்த புலனாய்வு முடிவுகளை அது சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு(ஏஜி) அனுப்பியுள்ளது என பிகேஆர் வழக்குரைஞர் எம் மனோகரன் தெரிவித்தார்.

அந்த விசாரணை முடிந்து விட்டது என்றும் ஏஜி அலுவலகத்துக்கு அது அனுப்பப்பட்டுள்ளது என்றும் குற்றப்புலனாய்வுத் துறையின் துணை இயக்குநர் அப்துல் சாமா கூறியதாக அவர் சொன்னார்.

அந்த விவகாரத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக புக்கிட் அமான் போலீஸ் நிலையத்தில் அப்துல் சாமாவை இன்று பிற்பகல் அந்த தெலுக் இந்தான் எம்பி சந்தித்தார்.

அந்த நிகழ்வை படம் பிடித்தவர்களும் வீடியோ எடுத்தவர்களும் முன் வந்து வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

என்றாலும் பிரதமர் அலுவலகத்தில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதை குறிப்பிட்ட மனோகரன், போலீசார் அதனையும் பார்க்க வேண்டும் என்றார்.

வழக்குத் தொடருவதா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு இப்போது ஏஜி-யிடம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

“ஏஜி வழக்குத் தொடருவதில்லை என முடிவு செய்தால் நாங்கள் அவரது அலுவலகத்திற்கு அந்த விஷயத்தைக் கொண்டு செல்வோம்.”

என்றாலும் இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை என்றும் மனோகரன் குறிப்பிட்டார்.

“புலனாய்வு முடிந்து விட்டால் ஏன் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை ?”

“அன்றைய தினம் அங்கு இருந்த போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் (அந்த மோதலில் தலையிடாதற்காக) நாங்கள் விரும்புகிறோம். காரணம் அவர்கள் செயல்படாமல் இருந்தது, போலீஸ் சட்டத்தை மீறுவதாகும்” என்றார் அவர்.

அடையாளக் கார்டு இல்லாததால் தேசியத் தேர்வுகளை எழுத முடியாத நிலையில் இருந்த ரெஷினா பற்றிய மனுவைப் பிரதமரிடம் கொடுப்பதற்காக பிகேஆர், நேரத்தை ஏற்பாடு செய்து அங்கு சென்றிருந்தது.

இந்திய சமூகத்துக்கு குறிப்பாக அடையாளக் கார்டுகளைப் பெறுவதில் உதவி செய்த பிரதமரது முயற்சிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் மகஜர் ஒன்றை வழங்குவதற்காக பிரதமர் அலுவலகத்தில் பெரிய எண்ணிக்கையிலான மஇகா குழு அங்கு கூடியிருந்தது. அப்போது மோதல் ஏற்பட்டது.

மஇகா குழு சண்டையை மூட்டி விட்டதாக பிகேஆர் குற்றம் சாட்டுகிறது. ஆனால் அதனை மஇகா மறுத்துள்ளது.