பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமாவில் உள்ள எப்பிங்காம் தோட்ட தேசிய வகைத் தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமான நிலம் பறிக்கப்பட்டதாக கூறப்படுவது மீது ஆட்சேபம் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் மருத்துவர்களுடைய அறிவுரைக்கு இணங்க இன்று பிறபகல் நிறுத்தப்பட்டது. (காணொளி 01) (காணொளி 02)
கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய அந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று பிற்பகல் மணி 12.05க்கு முடிவுக்கு வந்தது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐவரும் இளநீரை அருந்தி தங்களது நான்கு நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்கள்.
உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டதும் அவர்களில் நால்வர் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மய்யத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். இரண்டு ஆம்புலன்ஸ்களில் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
எபிங்காம் நிலத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை குழுவின்(Reflax) கீழ் அந்த பள்ளிக்கூட முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த பள்ளிக்கூடத்தை ஒட்டியுள்ள மூன்று ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரினர். அந்த நிலத்தை மாணவர் தங்கும் விடுதி ஒன்றைக் கட்டுவதற்கு பிஎன் உறுப்புக் கட்சியான மஇகா அந்த நிலத்தை எடுத்துக் கொண்டது.
நேற்று மஇகா உதவித் தலைவர் எம் சரவணன் அந்தக் குழுவின் கோரிக்கைகளை ஆராயும் எனக் கூறியதுடன் கட்சித் தலைமைத்துவம் அந்த விவகாரத்தைத் தீர்க்கும் என்றும் உறுதி அளித்தார்.
“இரண்டு தரப்புக்கும் வெற்றி என்னும் வகையில் தீர்வு காண கட்சித் தலைமைத்துவத்திடம் நாங்கள் அதனைக் கொண்டு செல்வோம்,” என்றார் சரவணன்.
உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது தங்கள் போராட்டம் நிறைவுக்கு வந்து விட்டதாக பொருள்படாது என Reflax தலைவர் ஜி மணிவண்ணன் வலியுறுத்தினார்.
‘நிலம் திரும்பக் கிடைக்கும் வரையில் வெற்றி இல்லை’
‘
அந்தப் பள்ளிக்கூடத்திடம் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும் வரையில் நாங்கள் வெற்றியைக் கொண்டாட மாட்டோம்,” என மணிவண்ணன் கூறினார்.
பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் ஆதரவு அளித்துள்ளதாலும் ஜுன் மாத இறுதிக்குள் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் உண்ணாவிரதத்தை மீண்டும் தொடங்க Reflax உறுப்பினர்களும் உறுதி கூறியதாலும் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்த போது பிகேஆர் உதவித் தலைவர்களான நுருல் இஸ்ஸா அன்வார், என் சுரேந்திரன், சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தெரெசா கோக், சுபாங் எம்பி ஆர் சிவராசா ஆகியோரும் அங்கு இருந்தார்கள்.
மேம்பாட்டுக்காக பள்ளிக்கூடத்துக்கு அந்த மூன்று ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுவதை விரைவுபடுத்துவதற்காக மஇகா தங்கும் விடுதிக்கு மாற்று இடத்தை வழங்குவது பற்றி பரிசீலிக்குமாறு சிலாங்கூர் அரசாங்கத்தத தாம் கேட்டுக் கொள்ளப் போவதாகவும் சிவராசா சொன்னார்.
“பள்ளிக்கூடத்துக்கு நிலம் கிடைத்து மஇகாவுக்கு அது கட்ட விரும்பும் தங்கும் விடுதிக்கு நிலம் கிடைக்கும் சூழலை நாம் உருவாக்க முடியும்,” என்றார் அவர்.