எப்பிங்ஹாம் நிலத்தை உடனடியாக மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும், கடிதம் வருகிறது

எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கரை மஇகா எடுத்துக்கொண்டது என்று கூறப்படும் விவகாரம் உண்ணாவிரதப் போராட்டம் வரையில் சென்றுள்ள வேளையில் அந்நிலத்தை மஇகா உடனடியாக சிலாங்கூர் மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இன்று கோலாலம்பூரில் நடந்த உண்ணாவிரத முடிவு நிகழ்வில் கூறப்பட்டது.

“எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட அந்த நிலத்தை மஇகா உடனடியாக சிலாங்கூர் மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரும் கடிதத்தை நான் மஇகா தலைவர் ஜி.பழனிவேலுக்கு அனுப்பப் போகிறேன்”, என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் இந்த நிலம் சம்பந்தமாக நடந்த உண்ணாவிரத போராட்டத்தின் முடிவு நிகழ்வில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், இந்த நிலத்திற்கு மஇகா கட்டியுள்ள “பிரிமியம்” தொகையைத் திருப்பித்தருவதற்கு தாம் சிலாங்கூர் மந்திரி புசாரிடம் பேசவிருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகூடங்கள் எதற்கும் ஆறு ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டதில்லை என்று கூட்டரசுப் பிரதேச நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் எம்.சரவணன் கூறியிருப்பதாகவும் அக்கூற்று தவறாகும் என்றார் சேவியர்.

புக்கிட் ராஜா தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு ஆறு ஏக்கர் நிலம் (சரியாக 5.73 ஏக்கர்) வழங்கப்பட்டிருப்பதையும் ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளிக்கு ஆறு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்பதற்கான உறுதிக்கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதையும் சேவியர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தெலுக்மர்பாவ் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு 6.5 ஏக்கர் நிலமும் சுங்கை மங்கீஸ் தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலமும் கொடுக்கப்பட்டுள்ளன. “இவை தமிழ்ப்பள்ளி எதற்கும் 6 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டதில்லை என்ற கூற்றை நிராகரிக்க போதுமான சான்றுகளாகும்” என்று சேவியர் மேலும் கூறினார்.

எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளியின் தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஹோஸ்டல் கட்டப்போவதாக கூறுவது சரியல்ல என்றாரவர்.

எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி அமைந்திருக்கும் அதே நகரில் தேசியப்பள்ளிக்கும் சீனப்பள்ளிக்கும் தலா 6 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் மட்டும் பாதியை மஇகா எடுத்துக்கொண்டதிலுள்ள விசேசம் என்ன என்று சேவியர் வினவினார்.