முன்னாள் போலீஸ்படைத் தலைவர் மூசா ஹசான், தம்மைப் பிடிக்காத சிலர் ஒன்றுசேர்ந்து தமக்கு இரகசியக் கும்பல்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி தம் பெயரைக் கெடுக்கப் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார்.
“முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சிலர் ஒன்றுசேர்ந்து எனக்கெதிராக சதி செய்கிறார்கள். என் மதிப்பைக் கெடுப்பதுதான் அவர்களின் நோக்கம். ஒருவேளை அன்வார்(குதப்புணர்ச்சி 1)வழக்கில் நான் விசாரணை அதிகாரியாக இருந்ததற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம்.
“என் மதிப்பு பாதிக்கப்பட்டால் அன்வார் அதை வைத்துக் கொண்டு நான் அவருக்கு எதிராக வழக்கு ஜோடித்தேன் என்று கூறலாம் அல்லவா.அதனால்தான் தொடர்பு இருக்கலாம் என்று நினைக்கிறேன்….” .
அப்படியானால், அந்த முன்னாள் அதிகாரிகளுக்கும் அன்வாருக்கும் தொடர்பு உண்டு என்கிறீர்களா என்று கேட்டதற்கு “இருக்கலாம்” என்று மட்டுமே மூசா,60, கூறினார்.
பணி ஓய்வுபெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர்-முன்னாள் கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறை(சிஐடி)தலைவர் மாட் ஜைன், வணிகக் குற்றப்புலனாய்வுத் துறை(சிசிஐடி)தலைவர் ரம்லி யூசுப்- மூசாவைக் குறை சொல்லி வந்துள்ளனர்.
இருவருமே மூசாவும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்லும் செய்த தவறுகளை விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அவ்வாறு குற்றம் சொல்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் எண்ணம் உண்டா என்று வினவியதற்கு “இல்லை” என்றார் மூசா.
மலேசியாகினி அந்த முன்னாள் போலீஸ்படைத் தலைவருடன் நடத்திய நேர்காணலில், 2007-இல், ஜோகூரில் சிசிஐடி-யால் கைதுசெய்யப்பட்ட கோ செங் போ அல்லது துங்கு கோ-வுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுவது பற்றி பல தடவை வினவப்பட்டது.
ஆனால், மூசா அவருக்கும் அந்த இரகசிய கும்பல் தலைவனுக்குமிடையில் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுவதை அடியோடு மறுத்தார்.
‘துங்கு கோவைத் தெரியாது’
துங்கு கோ-வைத் தமக்கு தெரியாது என்றாரவர்.துங்கு கோ சட்டவிரோத குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டதாக மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டது உண்டு ஆனால், அதற்கு ஆதாரங்கள் கிடையாது என்றவர் சொன்னார்.
“துங்கு கோ என்று சொல்லப்படும் நபரை எனக்குத் தெரியாது.அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சிசிஐடி-யால் கைது செய்யப்பட்டு ஜெலியில் நடமாட்டக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.சூதாட்டத்தைக் கவனிப்பது சிசிஐடியின் பொறுப்பு அல்ல.அது குற்றப் புலனாய்வுத் துறையின் டி7-இன் பொறுப்பு.சிசிஐடி அல்லது ரம்லி ஏன் அதில் சம்பந்தப்பட வேண்டும்?
“துங்கு கோவைக் கைதுசெய்ய அவரைப் பற்றி அறியாதவர்களிடம் எல்லாம் வாக்குமூலங்கள் பெற்று வழக்கை இட்டுக்கட்டினார்கள் என்பதை அறிய வந்தேன்”.
மூசா, அவரும் ஏஜி கனி பட்டேய்லும் அப்போதைய ஊழல் தடுப்பு வாரியமும்(ஏசிஏ) ரம்லியையும் அவரின் அதிகாரிகளையும் சிக்க வைக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுவதையும் மறுத்தார்.
ரம்லிதான் அவ்வாறு கூறியிருந்தார்.ரம்லி, 2007-இல், ஜோகூரில் கடன் முதலைகளின் தொல்லையை ஒழிக்க அமைக்கப்பட்ட பணிக்குழுவுக்குத் தம்மை இணைத் தலைவராக முன்னாள் உள்துறை அமைச்சர் ஜோஹாரி பஹாரோம் கூறினார்.மூசா ஒரு காலத்தில் ஜோகூரில் மாநில போலீஸ் தலைவராக இருந்திருக்கிறார்.
விசாரணையில் துங்கு கோவுக்கும் மூசாவுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது என்றும் ஆனால் கனியும் ஏசிஏ-யும் போலீஸ் தலைவரைக் காப்பாற்றுவதற்காக சிசிஐடி-இன் விசாரணைகளில் தெரியவந்த தகவல்களை வைத்து தகவல் தெரிவித்தவர்களையே குற்றவாளியாக்கினார்கள் என்றும் ரம்லி தெரிவித்தார்.
அதன் விளைவாக ரம்லியின்கீழ் பணியாற்றிய ஆறு போலீஸ் அதிகாரிகள் உடனடியாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு ஆதாரங்களை ஜோடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.ஆனால் இஸ்மாயில் ஒமார் ஐஜிபி ஆனதும் அவர்கள் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டனர்.
யார் அந்த பிகே டான்?
மூசாவுக்கு இன்னொரு மர்ம பேர்வழியுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்டது.பிகே டான் என்ற பெயரைக் கொண்ட அவருடன் போலீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு, பணிமாற்றம் பற்றி மூசா கலந்தாலோசிப்பாராம்.
அது பற்றி வினவியதற்கு, “டான்-னா அது யார்?”, என்று திருப்பிக் கேட்டார். டான் என்ற பெயரில் 20 பேரைத் தெரியும் என்றார்.
இந்த பிகே டான்-னுக்கு பெட்டாலிங் ஜெயா எம்கோர்ப் மாலில் அலுவலகம் உண்டு என்று கூறியதற்கு அவருடன் தமக்குத் தொடர்புண்டா என்று அதிகாரிகளே விசாரிக்கட்டும் என்றார்.
“பழைய கிள்ளான் சாலையில் ஒரு பிகே டான் இருந்தார்.அவரை நான்தான் கைதுபண்ணச் சொன்னேன்.
“மேலும், போலீஸ் அதிகாரிகள் பதவி உயர்த்தப்படும்போது அவர்களின் பின்னணியைப் பிரதமர் ஆராய்வார், போலீஸ் ஆணையமும் ஆராயும்”, என்றார்.
அவரின் முன்னாள் மெய்க்காப்பாளர் நூர் அசிசுல் ரகிம், மூசாவும் பிகே டானும் போலீஸ் அதிகாரிகளின் பணி உயர்வு பற்றிக் கலந்துரையாடியதை நேரில் பார்த்திருப்பதாகக் கூறியதுடன் அதன் தொடர்பில் சத்திய பிரமாணம் செய்திருப்பதையும் சுட்டிக்காட்டியதற்கு போலீஸ் தலைவர் என்ற முறையில் தம் அதிகாரிகளின் பின்னணி பற்றித் தெரிந்துகொள்ள தாம் எவருடனும் ஆலோசனை கலக்கலாம் என்றவர் பதிலுரைத்தார்.
“ நான் யாரோடும் அலோசனை கலக்கக்கூடாதா? ஓசிபிடி(போலீஸ் மாவட்ட பொறுப்பதிகாரி)-கள் குறித்து எல்லாருடைய கருத்துகளையும் பெற நினைப்பேன்.அப்போதுதான் வேலை செய்பவர்கள் யார் என்பதை அறிந்து பதவி உயர்வு கொடுக்க முடியும்.அது தப்பா?”.
அப்படி கலந்தாலோசிக்கப்பட்டவர்களில் பிகே டானும் ஒருவரா என்று வினவியதற்கு அந்த டானை மலேசியாகினிதான் அழைத்து வர வேண்டும் என்றார்.
ரம்லிமீது புகார் செய்தவர் ஜெப்ரி கிட்டிங்கான்
ரம்லிமீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு ஜெப்ரி பைரின் கிட்டிங்கான் செய்த புகார்தான் காரணம் என்று மூசா தெரிவித்தார்.முன்னாள் சிசிஐடி இயக்குனர், ஒரு நேரத்தில் சாபா போலீஸ் தலைவராகவும் இருந்தவர், சாபாவில் 200 ஏக்கர் நிலம் வைத்திருந்தார் என்று புகார் செய்யப்பட்டிருந்தது.
“புகார் செய்தவர் (முன்னாள் சாபா முதலமைச்சர்)ஜோசப் பைரினின் சகோதரர் ஜெப்ரி(வலம்). அதன்பேரில் ஏசிஏ விசாரணை மேற்கொண்டது.
“என்னைக்கூடத்தான் ஏசிஏ விசாரணை செய்தது.என் வங்கிக் கணக்கையெல்லாம் காட்டினேன்(இரகசியக் கும்பலுடன் தொடர்புள்ளதாகக் கூறப்பட்டபோது நடந்தது).
“அதனால் நான்தான் ரம்லிமீது வழக்கு ஜோடித்தேன் என்பது சரியல்ல.ஜெப்ரிதான் புகார் செய்தார். புகாரின்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கிறீர்களா?”, என்று மூசா வினவினார்.
ரம்லி, சொத்து விவரங்களை ஏசிஏ-இடம் தெரிவிக்கவில்லை என்றும் சாபாமீது பறக்க போலீஸ் செஸ்னா விமானம் ஒன்றைப் பயன்படுத்தி அதிகார அத்துமீறல் புரிந்தார் என்றும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவர்மீதான வழக்கு முதலில் சாபாவிலும் பின்னர் கோலாலம்பூரிலும் நடைபெற்றது.ஆனால், செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், முறையீட்டு நீதிமன்றம் ஆகிய மூன்றும் ரம்லியை எதிர்வாதம் செய்ய அழைக்காமலேயே குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.