பின்புறத்தைக் காட்டியவர்கள்: நாங்கள் அம்னோ கைப்பாவைகள் அல்ல

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா வீட்டுக்கு முன்னாள் பின்புறத்தைக் காட்டி உடற்பயிற்சி செய்து பொது மக்களிடையே ஆத்திரத்தை மூட்டி விட்ட பிவிடிஎம் என்ற மலாய் முன்னாள் இராணுவ வீரர் சங்கம்- தான் அம்னோ ஏஜண்டு எனக் கூறப்படுவதை வன்மையாக மறுத்துள்ளது.

“அரசாங்கம் எங்களைப் பயன்படுத்தவில்லை. நாங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறுவதை எல்லா பிஎன் அல்லது எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். காரணம் நாங்கள் அப்படி அல்ல,” என அதன் தலைவர் முகமட் அலி பாஹாரோம் பேட்டி ஒன்றில் கூறினார்.

“எங்களுக்கு யாரும் ஆணையிடவில்லை. அம்னோ அல்லது பிஎன் அவ்வாறு உத்தரவிட்டதாகச் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். காரணம் எங்களுக்கு யாரும் ஆணையிடவில்லை..”

இரண்டு அம்னோ கொடிகள் வெளியில் பறந்து கொண்டிருந்த அவரது பூச்சோங் வீட்டில் அந்தப் பேட்டி நடத்தப்பட்டது.

தாம் அம்னோ உறுப்பினர் எனக் கூறப்படுவதையும் அந்த முன்னாள் அரச மலாய்ப் பட்டாள வீரர் மறுத்தார்.

“நான் நாட்டின் நற்பெயரிலும் கௌரவத்திலும் அக்கறை கொண்டுள்ள சாதாரண அரசாங்க ஆதரவாளர்.”

பிவிடிஎம் அம்னோவின் முன்னணி அமைப்பு என்றும் சின்னச் சின்ன வேலைகளை அம்னோ அதனிடம் ஒப்படைக்கின்றது என்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு முகமட் அலி பதில் அளித்தார்.

அரச மலாய்ப் பட்டாளத்தில் இருந்த போது தாம் தமது குத்துச் சண்டை போட்டித் திறனுக்காக ‘Ali Tinju’ என அழைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

மே 15ம் தேதி நடந்த அந்த உடற்பயிற்சி குறித்து மலேசியாகினி உட்பட ‘உண்மைகளைத் திரித்துப் போட்ட’ ஊடகங்களையும் அவர் அந்தப் பேட்டியில் சாடினார்.

“அன்றைய தினம் மலேசியாகினி எங்களுடன் இருந்தது. நாங்கள் கைகளை தட்டினோம். அப்போது பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்கவில்லை. நாங்கள் குனிந்த போது அவர்கள் படம் எடுத்து அதனை பின்புறத்தைக் காட்டும் பயிற்சி என அழைத்தனர்.”

“Siapa makan cili, dia terasa pedas” (நீங்கள் ஏதாவது தவறு செய்தால் உங்களுக்கு குற்ற உணர்வு இருக்கும்),” எனக் கூறிய முகமட் அலி, பிரச்னையை பரபரப்பாக மாற்றுவதிலேயே ஊடகங்கள் அக்கறை காட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.

“உடற்பயிற்சியின் போது யார் குனிவது இல்லை, நீங்கள் என்னிடம் சொல்லுங்கள் ?” என வினவிய அவர், உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான பயிற்சிகளில் அது போன்ற குழு அசைவுகள் வழக்கமானவை என வலியுறுத்தினார்.

சந்திப்பின் போது அம்பிகாவை மருட்டியதாகக் கூறப்படுவதையும் முகமட் அலி நிராகரித்தார்.

“நான் மருட்டியதாக அவர் சொல்கிறார். உண்மையில் நான் அவரை மிரட்டவில்லை. “யாராவது ஒருவரை மருட்டுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மாறுபட்டவை (நான் சொன்ன வார்த்தகைகளிலிருந்து)

“ஒருவரை மிரட்ட வேண்டுமானால் நீங்கள் “உன்னைத் தாக்குவேன். உன்னைக் கொல்வேன்” (I shall hit you, I shall kill you’) எனச் சொல்ல வேண்டும். அவரை எச்சரித்தது மட்டுமே நான் செய்தது. அது மிரட்டல் அல்ல. சட்ட அகராதியைப் பாருங்கள்…”

“அவர் எங்கு கற்றார் என்பது எனக்குத் தெரியாது. முன்னள் வீரர்கள் என்னும் முறையில் எங்களுக்கு படை பலத்தைப் பயன்படுத்துவதற்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படவில்லை. வன்முறை அல்லாத வழிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.”

“அந்த உடற்பயிற்சி இனத்துக்கு அப்பாற்பட்டது’

அம்பிகா மிகவும் பிரபலமான புள்ளியாக இருப்பதால் அவரது வீடு தேர்வு செய்யப்பட்டது எனக் கூறிய முகமட் அலி, அவர் பெண்ணாக இருப்பதாலும் இனத்துக்காகவும் அவர் மீது குறி வைக்கப்பட்டதாக கூறப்படுவதையும் நிராகரித்தார்.

“இன, இஸ்லாமிய அடிப்படையில் அது மலாய்க்காரராக இருந்தாலும் சீனர்களாக இருந்தாலும் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. உடற்பயிற்சிக்கு இனம் கிடையாது.”

“தற்செயலாக அவர் “முதல் டிக்கெட்டை” (மிகவும் பிரபலமானவர்) வைத்திருக்கிறார். முதல் டிக்கெட் என்பது மிகவும் மதிப்புமிக்க டிக்கெட் ஆகும்.”

அந்த நிகழ்வு குறித்து ஏன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கவில்லை எனக் கேட்கப்பட்ட போது முன்னாள் இராணுவ வீரர்கள் இரகசியமாக வேலை செய்வதாகச் சொன்னார்.

“முன்னாள் இராணுவ வீரர்களின் gerak gempur (போர்க்கால நடவடிக்கைகள்) ரகசியமானவை. அது வெடிக்கும் போது தான் அவற்றுக்குத் தெரிய வரும்,” என அவர் புன்னகையுடன் கூறினார்.

“40,000 பிவிடிஎம் உறுப்பினர்கள்” இருக்கும் போது ஏன் 15 பேர் மட்டும் அங்கு இருந்தார்கள் என்ற கேள்விக்குப் பதில் அளித்த முகமட் அலி, அது வெறும் உடற்பயிற்சி தான். ஆயிரக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட வேண்டிய அவசியமே இல்லை எனக் கூறினார்.

“எது எப்படி இருந்தாலும் முன்னாள் இராணுவ வீரர்களின் செல்வாக்கு “அம்பிகாவை அடி பணிய வைத்து விட்டது” எனத் தாம் ஏற்கனவே கூறிக் கொண்டதை இந்தப் பேட்டியிலும் அவர் வலியுறுத்தினார்.

“அவர் என்னைப் பார்த்ததும் அவர் எனக்கு மரியாதை கொடுப்பதாகத் தோன்றியது. நாங்கள் ஏன் அங்கு இருக்கிறோம் என்பதை அவர் புரிந்து கொண்டார். அதனால் தான் அவர் இயல்பாகவே அழுத்தத்தை உணர்ந்தார். குற்றத்தையும் உணர்ந்தார். பாஸ் கட்சி வற்புறுத்திய போதிலும் பெர்சே 4.0 இல்லையென அறிவித்தார்.”

தங்களுக்கு அடிபணிய அம்பிகா செய்த முடிவு பாராட்டப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அவரைத் தனியாக விடுமாறு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அவரது வீட்டுக்கு முன்னால் சட்ட விரோதமாக பாசார் மாலாம் (சந்தை) போடப் போவதாக மிரட்டியுள்ள பெர்சே எதிர்ப்பு வியாபாரிகளை முகமட் அலி கேட்டுக் கொண்டார்.

என்றாலும் அந்த வியாபாரிகளின் பிரச்னை மீதும் பெர்சே 3.0 பேரணியின் போது இழப்பு ஏற்பட்டதாகத் தாங்கள் கூறிக் கொள்வதற்கு அவர்கள் இழப்பீடு கோருவது மீதும் அவர் அனுதாபம் கொண்டுள்ளார்.

இன்னொரு பேரணியை நடத்த அம்பிகா முடிவு செய்தால் அவருக்கு இடையூறு செய்ய நாங்கள் மீண்டும் வருவோம் என முகமட் அலி எச்சரித்தார்.

“அவர் மீறினால் நாம் மீண்டும் சந்திப்ப்போம்.”

அடுத்து கர்பால் ?

தங்களது ஆட்சேபத்தை குறை கூறிய அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அதற்காக பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் அவர் வீட்டுக்கு முன்பு உடற்பயிற்சி செய்யும் திட்டத்தை தமது சங்கம் ரத்துச் செய்து விட்டதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

“நாங்கள் அவரை மன்னித்து விட்டோம். இல்லை என்றால் அவரது வீட்டுக்கு முன்னாலும் நாங்கள் ஆட்சேபம் செய்திருப்போம்.”

ஆனால் அவர்கள் தங்கள் கண்களை இன்னொரு வீட்டின் மீது திருப்பியுள்ளனர். அரசமைப்பு அடிப்படையில் மலாய்க்காரர் அல்லாத ஓருவர் பிரதமராக முடியும் என மீண்டும் வலியுறுத்தியுள்ள டிஏபி தலைவரும் மூத்த வழக்குரைஞருமான கர்பால் சிங்-கின் வீடே அதுவாகும்.

“மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராகலாம் என்ற அவரது அறிக்கையால் நாங்கள் ஆத்திரமடைந்துள்ளோம். ஏமாற்றம் அடைந்துள்ளோம். அவமதிக்கப்பட்டுள்ளோம். வழக்குரைஞர் என்ற முறையில் அவர் மலாய் ஆட்சியாளர்களை மதிக்க வேண்டும் என நான் எச்சரிக்க விரும்புகிறேன்.”

“Tutup mulut, jangan sedap bercakap, nanti binasa diri.” ( உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள். அதிகம் பேச வேண்டாம். இல்லை என்றால் அது உங்களுக்கே ஆபத்தாகலாம்).”

முஸ்லிம்களுக்கு 100 Plus ஹராம் என தாம் ஒரு போதும் சொல்லவில்லை என்றும் முகமட் அலி விளக்கினார்.

பின்புறத்தைக் காட்டிய அந்த உடற்பயிற்சிக்குப் பின்னர் அம்பிகா கொடுக்க முன் வந்த isotonic சுவைபானங்களை மலாய் முஸ்லிம் என்ற முறையில் தாம் அருந்துவது இல்லை என்று மட்டும் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

“எது எப்படி இருந்தாலும் அந்த ‘உடற்பயிற்சி’ சில நிமிடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டதால் நாங்கள் களைப்படையவில்லை என்பதால் அந்த பானத்தை மறுத்தோம்.”

நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருடைய எண்ணங்கள் பற்றிய விஷயமும் அந்தப் பேட்டியின் போது எழுப்பப்பட்டது.

அந்த உடற்பயிற்சி நிகழ்வை நடத்தியதற்காக அவர்களுடைய முழு ஆதரவு தங்கள் குழுவுக்குக் கிடைத்துள்ளதாக முகமட் அலி விளக்கினார்.

“நாங்கள் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். தலைவர் என்ற முறையில் முன் வந்து செய்ததற்காக அவர்கள் எனக்கு நன்றி கூறியுள்ளனர்.”

தமது தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்த தமது கடந்த காலத்தை தோண்டும் முயற்சிகள் என அவர் வருணித்த நடவடிக்கைகளையும் அவர் நிராகரித்தார். தாம் ஒரு காலத்தில் வாங்கிய டத்தோ விருது பற்றிய கதைகளையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார். தாம் அதனைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதாகவும் அவர் சொன்னார்.

“அது பழைய விவகாரம். நான் அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளேன். என்றாலும் நான் அதை வாங்கியிருந்தாலும் அது ஒரு மில்லியன் ரிங்கிட். அது என் சொந்தப் பணம். என்னைக் குறை கூறுகின்றவர்களுடைய பெற்றோர்களிடமிருந்து நான் பணம் கேட்கவில்லை. என் பணம். என் உரிமை.”

‘டத்தோ’ விருது கவர்ச்சியாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்துவது அதன் மதிப்பைக் காட்டிலும் அதிகமான சிரமங்களை கொண்டு வருகிறது என அவர் வருத்தத்துடன் கூறினார்.

காரணம் நன்கொடைகளை நாடுவோரும் மோசடிக்காரர்களும் தம்மைக் குறி வைத்தனர் என்றும் . அதனால் தமக்கு ‘தலைவலிகளே’ அதிகமாகின என்றும் முகமட் அலி குறிப்பிட்டார்.

 

.

 

TAGS: