3,457 கிள்ளான் வாக்காளர்களைக் காணவில்லையாம், எம்பி கூறுகிறார்

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, தம் தொகுதியில் 3,457வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து மாயமாய் மறைந்துவிட்டதாகக் கூறுகிறார்.

“2008 பொதுத் தேர்தலில் அவர்கள் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களாக இருந்தனர்.ஆனால், அவர்களின் அடையாள அட்டை எண்ணை தேர்தல் ஆணையத்தின் தரவுதளத்தில் பதிந்து கொண்டு தேடிப் பார்த்தால் ‘தகவல் ஏதுமில்லை’ என்று காண்பிக்கிறது”. இன்று காலை கிள்ளானில் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்திய சந்தியாகு அதன்பின்னர் மலேசியாகினியை அழைத்து இத்தகவலைத் தெரிவித்தார்.

நடப்புச் சட்டப்படி இறந்தவர்கள், நொடித்துப் போனவர்கள், குடியுரிமை பறிக்கப்பட்டவர்கள், மனநிலை குலைந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும்.பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணம் ஒவ்வொரு காலாண்டு பட்டியலிலும் தெரிவிக்கப்படும்.

ஆனால், இந்தக் கிள்ளான் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதற்குக் காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாரவர். அத்துடன் அவர்கள் எல்லாருமே முதியவர்களும் அல்லர்.

“நாங்கள் தேடிப் பலரைக் கண்டுபிடித்தோம். அவர்கள் உயிருடன் வாக்களிக்கும் தகுதியுடன் இருக்கிறார்கள்”, என்றாரவர்.

சந்தியாகுவும் அவரின் குழுவினரும்,  கிள்ளானில் 2,195 வாக்காளர்கள் தங்களின் வாக்களிக்கும் முகவரிகளை மற்ற தொகுதிகளுக்கு மாற்றிக்கொண்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். ஆனால்,வாக்காளர் பட்டியலில் உள்ள அவர்களின் முகவரிகள் இன்னமும் கிள்ளான் முகவரிகளாகத்தான் இருக்கின்றன. இது நடப்பு விதிமுறைகளுக்கு முரணானது.

2002-இலிருந்து வாக்காளரின் மைகார்ட்டில் எந்த முகவரி உள்ளதோ அந்த முகவரியும் வாக்களிக்கும் முகவரியும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை இசி கட்டாயமாக்கியுள்ளது.

வாக்காளர்கள் வாக்களிக்கும் தொகுதிகளை மாற்ற நினைத்தால் மைகார்டில் உள்ள அவர்களின் முகவரிகளை முதலில் மாற்றியாக வேண்டும்.

இந்த கிள்ளான் வாக்காளர்கள் தங்களின் வாக்களிக்கும் முகவரிகளை மாற்றிக்கொண்டிருந்தால் முதலில் மைகார்டில் முகவரியை மாற்றியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அது வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கும்.

இந்த 2,195 வாக்காளர்களும் சாபா, சரவாக் உள்பட 184 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சந்தியாகு கூறினார்.

“இந்த இடமாற்றம் கேள்விக்குரியதாக விளங்குகிறது.கிள்ளான் வாக்காளர் பட்டியல் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்”, என்றாரவர்.

இதன் தொடர்பில் மே 17-இல் சிலாங்கூர் இசி-இடம் சந்தியாகு புகார் செய்தார்.ஆனால் இதுவரை பதில் இல்லை.

“இப்போது நாங்கள் களத்தில் இறங்கி வாக்காளர்களைத் தேடப் போகிறோம்”, என்றாரவர்.
 
கிள்ளான் பண்டார் புக்கிட் திங்கியில் ஒரு வாக்காளரின் பெயர் திடீரென்று வாக்காளர் பட்டியலிலிருந்து காணாமல் போனது என்றும் அவர் திரும்பவும் வாக்காளராக பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அந்த டிஏபி எம்பி தெரிவித்தார்.

இன்னொரு பெண்மணி வாக்காளராக பதிவு செய்ததே இல்லை.ஆனால், இசி தரவுத்தளத்தை ஆராய்ந்ததில் அவர் பட்டர்வொர்தில் ஒரு வாக்காளர் என்று காண்பித்தது. அப்பெண்மணி பட்டர்வொர்தில் இருந்ததே இல்லை. 

இதைப் பற்றி சந்தியாகு செய்தியாளர் கூட்டத்தில் விவரித்துக் கொண்டிருந்தபோது பெண் செய்தியாளர் ஒருவர் தமக்கும் அந்த அப்படிப்பட்ட அனுபவம் உண்டு என்று குறிப்பிட்டார்.

அவர் வாக்காளராக பதிவு செய்துகொண்டதில்லை. ஆனால், ஹுலு சிலாங்கூரில் அவரது பெயர் ஒரு வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருந்ததாம்.