பிஎன் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட டிஏபி-இன் இருவருக்கு எலும்புமுறிவு

இண்ட்ராபிலிருந்து பிரிந்துசென்றவர்களால் அமைக்கப்பட்ட மலேசிய இந்தியர் குரலுக்கு (எம்ஐவி)தலைமைவகிக்கும்  சிலாங்கூர் டிஏபி மாநிலச் செயலவை உறுப்பினர் வி.கணபதி ராவும் அவரின் சகோதரர் வி,ராயுடுவும் நேற்றிரவு கிள்ளானில் பிஎன் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்கள்.

தாமான் முத்தியாராவில் சாலைச் சந்திப்பு ஒன்றில் தாங்கள் தாக்கப்பட்டதாக கணபதி ராவ் இன்று காலை மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அந்த 10-நிமிடத் தாக்குதலில் கணபதி ராவுக்கு(படத்தில் நடுவில் இருப்பவர், வலம் இருப்பவர் ராயுடு) மூக்கில் எலும்பு முறிவும் தாடையில் வீக்கமும் உடலில் காயங்களும் ஏற்பட்டன.ராயுடுவின் வலக்கையின் மேற்பகுதியில் எலும்பு முறிந்து தோள்பட்டையும் விலகி விட்டது.

இருவரும் கிள்ளான் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டனர். கணபதி ராவ் இன்று பின்னேரம் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்.

முன்னாள் இண்ட்ராப் தலைவரும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவருமான கணபதி (வலம்) கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட எம்ஐவி கூட்டம்தான் தாங்கள் தாக்கப்பட்டதற்குக் காரணம் என்றார். அக்கூட்டத்தில்  ஆயிரம் இந்தியர்கள் கலந்துகொண்டு பக்காத்தானுக்கு ஆதரவு தெரிவித்தது தாக்குதல்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்திருந்த அவர்கள் தங்களைத் தாக்கியதாக அவர் சொன்னார்.

“நேற்றிரவு நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். தாமான் முத்தியாராவில், ஜாலான் மேருவில் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்றிருந்தோம். நாங்கள் சென்ற வீட்டுக்கு 50மீ தொலைவில் தாக்குதல்காரர்கள் மூவரும் சாலையின் நடுவே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

“அவர்களில் ஒருவரை எனக்குத் தெரியும். இரண்டாண்டுகளுக்கு முன் என்னை அணுகி பிஎன்னில் சேருமாறு கேட்டுக்கொண்டவர் அவர். அவர் என்னிடம் எம்ஐவி பேரணி நடத்தி ‘தைக்கோ’(சண்டியர்) ஆகி விட்டீர்கள் என்று கூறினார். பதிலுக்கு நான் அவர்கள் ஏமாற்றுப்பேர்வழிகள், துரோகிகள் என்றேன்.

“அங்கிருந்து விலகிச் செல்ல முயன்றேன் ஆனால், அதற்குள் ஒருவர் கையில் வைத்திருந்த கார் ஸ்டீயரிங் பூட்டால் என்னைத் தாக்கினார். என் அண்ணா என்னைப் பாதுகாக்க வந்தார். மற்ற இருவரும் அவரைத் தாக்கினார்கள். என் மூக்கு உடைந்தது, கண்ணாடி பறந்துபோனது, மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியதால் உடை எல்லாம் சிவப்பானது.

“விடாமல் குத்தினார்கள், உதைத்தார்கள். இரும்புக் கம்பிகளையும் பிளாஸ்டிக் நாற்காலியைக் கொண்டும் தாக்கினார்கள்”, என்றவர் கூறினார்.

அம்மூவரும் அவ்விடத்தைவிட்டு அகலுமுன்னர் கணபதிராவின் கார் கண்ணாடியையும் உடைத்தனர்.

போலீஸ் புகார்

நேற்றிரவு ராயுடு போலீஸ் புகார் ஒன்றைச் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்றுகாலை போலீசார் கணபதி ராவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்தனர்.

கணபதி ராவிடம் அவரது சினமூட்டும் பேச்சுத்தான் தாக்குதலுக்குக் காரணமா என்று வினவியதற்கு, அவர்கள் கையில் ஆயுதங்கள் வைத்திருந்ததைப் பார்க்கையில் தங்களைத் தாக்குவதற்குத் தருணம் பார்த்துக் காத்திருந்ததுபோலத் தோன்றுகிறது என்றவர் பதிலளித்தார்.

“இதன் பின்னணியில் யாரோ ஒரு சூத்திரதாரி இருக்க வேண்டும்…. அவர்கள் இண்ட்ராப் 2.0 என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்”, என்றாரவர்.

ராயுடுதான் (வலம்) எம்ஐவி தலைவர். அவர் கோட்டா ராஜா டிஏபி நாடாளுமன்றத் தொகுதி தொடர்புக்குழுத் தலைவருமாவார்.

தாக்குதல்காரர்களில் ஒருவர் தாமான் முத்தியாரா வட்டாரத்தைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று கணபதி ராவ் கூறினார். அவருக்கு, எம்ஐவி பேரணிக்கு ஆதரவாளர்களை ஏற்றிச்செல்ல ஒரு பேருந்தை அங்கு அனுப்பி வைத்தது பிடிக்கவில்லை. ஆத்திரமடைந்து விட்டார்

“நாங்கள் அவரது எல்லைக்குள்  அத்துமீறி நுழைந்துவிட்டோமாம்”, என்றாரவர்.