‘பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி’ அரசாங்க உதவியைப் பெறுவதற்கான தந்திரம் அல்ல

பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா வீட்டுக்கு முன்னால் ‘பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி’ யை தனது உறுப்பினர்கள் நடத்தியது கூட்டரசு அரசாங்க நிதி உதவியைப் பெறுவதற்கான முயற்சி எனக் கூறப்படுவதை  முன்னாள் இராணுவத்தினரைப் பிரதிநிதிக்கும் சங்கம் ஒன்று மறுத்துள்ளது.

“நிச்சயமாக இல்லை. அரசாங்கம் எனக்கு ஆதரவு அளித்தால் நான் இது போன்ற இரண்டு மாடி வரிசை வீட்டில் வாழ மாட்டேன். நான் பங்களாவில் வசிப்பேன். டிரைவர் ஒருவர் ஒட்ட நான் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பயணம் செய்வேன்.”

“மற்றவர்கள் எனக்கு ஆணையிட்டிருந்தால் அல்லது அதற்காக பணம் கொடுக்கப்பட்டிருந்தால் நான் பல மில்லியன் மதிப்புள்ள வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பேன்,” என PVTM என்ற மலாய் முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கத் தலைவர் முகமட் அலி பாஹாரோம் இவ்வாரத் தொடக்கத்தில் பூச்சோங்கில் உள்ள தமது வீட்டில் வழங்கிய பேட்டி ஒன்றில் கூறினார்.

பாஸ் கட்சியுடன் தொடர்புடைய Kerabat என அழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர்கள், ஓய்வூதியக்காரர்கள் நலன் மன்றத் தலைவர் லெப்டினண்ட் கர்னல் முகமட் நஸாரி மொக்தார் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகமட் அலி பதில் அளித்தார்.

“பிவிடிஎம் நடவடிக்கைகளைக் குறை கூறிய கெராபாட் தலைவர், சில முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கங்கள் பணத்துக்காக இயங்குவதாக குற்றம் சாட்டினார்.

முன்னாள் இராணுவ வீரர்கள் விவகாரத் துறை வழியாகக் கொடுக்கப்படும் தற்காப்பு அமைச்சு ஒதுக்கீடுகளைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாக இருக்கக் கூடும் என அவர் சொன்னார்.

“அந்த சங்கங்களில் சில பிஎன் தலைவர்களுடைய சேவகர்களாக இப்போது மாறி விட்டன,” என்று எதனையும் பெயர் குறிப்பிடாமல் நஸாரி சொன்னார்.

அரச மலாய்ப் பட்டாளத்தின் 21வது பிரிவில் பணியாற்றிய முகமட் அலி கெராபாட்டை கடுமையாக விமர்சனம் செய்ததுடன் நஸாரி “தமது சொந்த வீட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டும்,” என்றும் கூறினார்.

அவர் சொன்னார்; கெராபாட் அடுத்த பக்கத்தில் உள்ளது. நாங்கள் இந்தப் பக்கத்தில் இருக்கிறோம். நாம் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி வினோதமான விளைவுகளைக் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக நான் நன்றி கூறுகிறேன். ஆனால் அது என்னுடைய உரிமை. அவர் அதனை மதிக்க வேண்டும்.”

“நான் ஆடையின்றி அவரது வீட்டுக்கு முன்னால் அணிவகுத்துச் செல்லும் வரை அது தொடர வேண்டாம்.”