சரவாக் ‘விடுதலை வானொலி’ அறிவிப்பாளர் கோத்தா கினாபாலுவில் கைது!

சரவாக் விடுதலை வானொலி ( Radio Free Sarawak ) அறிவிப்பாளர் பீட்டர் ஜான் ஜபான் இன்றுகாலை கோத்தா கினாபாலு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மிரி-க்குச் செல்வதற்காக அந்த விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

Papa Orang Utan என்ற புனை பெயரில் பீட்டர் லண்டனைத் தளமாகக் கொண்ட அந்த வானொலியில்அறிவிப்புக்களைச் செய்து வருகிறார்.

 “தடுத்து வைக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டு அவரது ஆவணங்கள் பிரதி எடுக்கப்பட்டதாக” அந்த வானொலில் வெளியிட்ட அறிக்கை கூறியது.

“அவர் ஏன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம்,” என அந்த நிலையம் தெரிவித்தது.

தமது குடும்பத்தினரைக் காணவும் டயாக் அறுவைத் திருவிழாவான காவாயைக் கொண்டாடவும் பீட்டர் விடுமுறையில் சரவாக் சென்றுள்ளார்.

அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த சில பெரும்புள்ளிகள் அந்த வானொலி நிலையத்துக்கு எதிராக மருட்டல்களை விடுத்துள்ளதால் மலேசியாவுக்குத் திரும்புவது குறித்து அவர் மிகவும் கவலைப்பட்டதாகவும் அந்த வானொலி கூறியது.

தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்கள் கூட கூறப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அந்த வானொலி நிலையம் வன்மையாக மறுத்துள்ளது. அந்த வானொலி சரவாக் முதலமைச்சர் தாயிப் மாஹ்முட்டை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

என்றாலும் தமது குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிட பீட்டர் விரும்பினார். அண்மைய காலமாக உடல் ஆரோக்கியத்துடன் இல்லாத தமது தந்தை குறித்து குடும்பம் பெரிதும் கவலைப்படுவதாக பீட்டருடைய புதல்வர் சரவாக் விடுதலை வானொலியிடம் கூறினார்.

அந்த அறிவிப்பாளர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். மன உளைச்சலினாலும் சிரமப்படுகிறார்.