அஸ்மின் அலியைப் பாதுகாத்ததாக கூறப்படுவதை முன்னாள் ஏசிஏ தலைவர் மறுக்கிறார்

1995ம் ஆண்டு அன்வார் இப்ராஹிம் உத்தரவின் பேரில் அஸ்மின் அலிக்கு எதிரான ஊழல் புகார்களை தாம் மூடியதாக வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதின் கூறிக் கொள்வதை முன்னாள் ஏசிஏ என்ற ஊழல் தடுப்பு நிறுவன தலைமை இயக்குநர் ஷாபீ யாஹாயா மறுத்துள்ளார்.

அதற்கு மாறாக தாம் அப்போது துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருந்த அன்வாரிடம் அந்த நேரத்தில் அன்வாருக்கு தனிப்பட்ட செயலாளராக இருந்த அஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தாம் பரிந்துரை செய்ததாக அவர் சொன்னார்.

எந்த ஒரு ஊழல் புலனாய்வுக்கும் மூன்று வழிகள் உள்ளதாகக் குறிப்பிட்ட ஷாபீ, ஒழுங்கு நடவடிக்கை அவற்றுள் ஒன்று என ஆங்கில மொழி நாளேடான நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

“எடுத்துக்காட்டுக்கு அந்த நபர் அரசாங்க ஊழியராக இருந்தால் ஊழல் அம்சங்கள் ஏதும் இல்லாமல் இருந்து அந்த நபருக்குக் கடன்கள் அதிகமாக இருந்து, வருமானத்திற்கு அப்பாற்பட்டு ஆடம்பர வாழ்ந்தால் அப்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்,” என ஷாபீ கூறியதாக அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவது, வழக்கை மூடுவது ஆகியவை மற்ற இரு வழிகள் ஆகும்.

அஸ்மினுக்கு கடன்கள் அதிகமாக இருப்பதைப் புலனாய்வுகள் காட்டின என்றும் வழக்குத் தொடருவதற்கு தேவையான ‘வலுவான ஊழல் அம்சங்கள் எதனையும் அவை கண்டு பிடிக்கவில்லை என்றும் ஷாபீ குறிப்பிட்டார்.

அந்த விவகாரம் மூடப்பட வேண்டும் எனத் தாம் ஆணையிட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார். “புலனாய்வை நிறுத்துமாறு நான் விசாரணை அதிகாரியைக் கேட்டுக் கொண்டதற்கான ஆதாரம் எங்கே ?” என அவர் வினவினார்.

அஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என அன்வாருக்குத் தாம் பரிந்துரை செய்தது நிறைவேற்றப்பட்டதா என்பதை ஷாபீ குறிப்பிடவில்லை.

 

TAGS: