உத்துசான் “கம்யூனிஸ்ட் கொடூரங்களை” சித்திரங்களாக வெளியிட்டுள்ளது

“முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பன்றி இறைச்சியை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்… குழைந்தைகளும் முதியவர்களும் நெருப்புக்குள் எறியப்படுகின்றனர்”  மலாயா கம்யூனிஸ்ட்கள் சாதாரண மக்களுக்கு இழைத்த ‘கொடுமைகள்’ என அம்பலப்படுத்துவதற்கு ஒவியர் ஹம்சா முகமட் அமின் வரைந்துள்ள சர்ச்சைக்குரிய கேலிச் சித்தரங்களில் அவை அடங்கும்.

அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவின் அச்சுப் பதிப்பிலும் இணையப் பதிப்பிலும் அந்த சித்திரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த சித்தரங்களை வழங்குவதற்காக 71 வயதான ஹம்சா நேற்று உத்துசான் அலுவலகத்துக்கு வந்ததாகவும் அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.

“கம்யூனிஸ்ட் கால கட்டத்தில் மக்கள் எதிர்நோக்கிய வாழ்க்கை சிரமங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அறியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு நான் அந்தச் சித்திரங்களை வரைந்தேன். கம்யூனிஸ்ட்களின் கொடூரங்களை அவர்கள் அறியவும் நாம் ஏன் கம்யூனிஸ்ட்களை வெறுக்கிறோம் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்”, என்றும் அவர் சொன்னதாக உத்துசான் செய்தி கூறியது.

“இளைய தலைமுறையினர் தங்களுடைய தாத்தா பாட்டிகள் வழியாக மட்டுமே கதைகளை செவிமடுத்திருக்க முடியும். ஆனால் கைதிகளை கம்யூனிஸ்ட்கள் எப்படி சித்தரவதை செய்தார்கள் என்பது அவர்கள் பார்க்கவில்லை.”

“அந்த ஒவியங்கள் வழி கம்யூனிஸ்ட்களுடைய கொடுமைகளை அவர்கள் உணர முடியும் என்றும் அதனால் பாடம் கற்றுக் கொள்ள இயலும் என்றும் நான் நம்புகிறேன்.”

சர்ச்சைக்குரிய அவரது ஒவியங்களில் ஒன்றில் குறுகிய கண்களைக் கொண்ட, சீருடை அணிந்திருந்த  மனிதர்கள் ஆயுதங்களைக் காட்டிக் கொண்டு பன்றி இறைச்சியை உண்ணுமாறு மக்களைக் கட்டாயப்படுத்துவதைக் காட்டியது.

“சூராவ்களைச் சேர்ந்த இமாம்களும் பிலால்களும் கூட சுடப்படுவதற்கு முன்னர் வேக வைக்கப்பட்ட பன்றி இறைச்சியை உண்ணுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.” (படக் குறிப்பு)

இன்னொரு சித்திரத்தில் சீருடை அணிந்திருந்த இருவர் தோட்டம் எனத் தெரியும் ஒர் இடத்தில் காணப்படுகின்றனர்.

அவர்களில் மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடக்கும் நிலத்தின் மீது தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் ஒரு கூடைய வைத்துக் கொண்டு காய்கறிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்.

“கொல்லப்பட்டவர்கள் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அந்தத் தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட காய்கறிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு உணவாக சமைக்கப்படுகின்றன” என இன்னொரு படக் குறிப்பு கூறியது.

அதே போன்று உடை அணிந்திருந்த மனிதர்கள் முதிய குடிமக்களை சாக்குகளில் போட்டுக் கட்டுவதையும் இன்னொருவர் ஒரு குழந்தையை எரியும் நெருப்புக்குள் வீசுவதையும் இன்னொரு சித்திரம் காட்டுகிறது.

நெருப்புக்குள் எறிவதற்கு முன்பு முதிய குடிமக்களை சாக்கு மூட்டைகளுக்கு வைப்பதாகவும் குழந்தைகள் நேரடியாக நெருப்புக்குள் எறியப்படுவதாக படக் குறிப்பு தெரிவித்தது.

மற்ற சித்திரங்கள் சித்தரவதை செய்யப்படும் மற்ற முறைகளைக் காட்டின- காயத்தில் உப்பு நீரை ஊற்றுவது, திருக்குர் ஆனைத் தவறாகப் பயன்படுத்துவது வீடுகளை எரிப்பது ஆகியவை அவற்றில் அடங்கும்.

கம்யூனிஸ்ட்களை ஹீரோக்களாக காட்டுவதற்கு சில தரப்புக்கள் நடவடிக்கை எடுத்ததால் அந்தச் சித்திரங்களை வரையுமாறு தாம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக ஹம்சா மேலும் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. தமது சித்திரங்கள் அந்த எண்ணத்தைப் போக்கும் என அவர் நம்புகிறார்.

“கம்யூனிஸ்ட்கள் அவ்வாறு அங்கீகரிக்கப்படுவது தம்மை பெரிதும் ஆத்திரமடையச் செய்தது,” என்றும் அவர் சொன்னார்.

“நாம் எப்படி பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு அங்கீகாரம் அளிக்க முடியும்?”

ஹம்சா ஏற்கனவே தேவான் பாஹாசா டான் புஸ்தகாவில் பணி புரிந்துள்ளார். 1963ம் ஆண்டு தொடக்கம் 1997ம் ஆண்டு வரையில் போலீஸ் பயன்படுத்திய சின்னத்தை அவர் வரைந்துள்ளார்.