முன்னாள் இராணுவத்தினர்: ஊழல் அமைச்சர் விலக வேண்டும்

முன்னாள் மலாய் இராணுவத்தினர் சங்கம் (பிவிடிஎம்) பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனை மட்டும் குறிவைத்து செயல்படவில்லை, ஊழல் செய்யும் அமைச்சர்களுக்கு எதிராகவும் அது செயல்படும்.

இதனைத் தெரிவித்த அதன் தலைவர் முகம்மட் அலி பஹாரோம், அதன் குறியில் சிக்கிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் இளநிலை அமைச்சர் என்றார். அமைச்சரின் பெயரை அவர் சொல்லவில்லை ஆனால் அவரின் மகன் ரிம30மில்லியன் அரசாங்கக் குத்தகையை சந்தேகத்துக்குரிய முறையில் பெற்றிருப்பதாக இணையத்தள வதந்திகள் கூறுகின்றன என்றாரவர்.

“அந்த ஊழல் அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.ரிம30மில்லியன் குத்தகையைப் பெற்றவவர் மகனாக இருந்தாலும் இருவரும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதால் அவரும் அரசியலைவிட்டு விலக வேண்டும் என்றாரவர்.

அமைச்சர் பற்றி ஒரு சிறு குறிப்பை மட்டுமே முகம்மட் அலி தெரிவித்தார்.அவர் இராணுவப் பின்னணி கொண்டவராம்.

அம்பிகா வீட்டின்முன் நடத்தியதுபோன்ற பிட்டத்தைக் காண்பித்துக்கொண்டு நடத்தும் உடற்பயிற்சி ஆமைச்சரின் வீட்டின் முன்புறத்திலும் அரங்கேற்றம் செய்யப்படுமா என்பதை முகம்மட் அலி கூறவில்லை.

அம்பிகா வீட்டின்முன் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்காக அவர்கள் குறைகூறப்பட்டார்கள், பிஎன்னின் கைக்கூலிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டனர். அக்குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று முகம்மட் அலி மறுத்தார்.

பிஎன் தலைவர்களிடையே காணப்படும் ஊழல்கள் அரசாங்கத்தின்மீதுள்ள நம்பிக்கை தேய்வதற்குக் காரணமாக உள்ளன என்று குறிப்பிட்ட அவர், அவற்றை ஒழித்துக்கட்டுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“ஊழல்பேர்வழிகளால் கட்சி அழிந்து வருகிறது என்பதால், அது மேலும் பரவுவதற்குமுன் அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

“ஊழல் ஒழிந்தால் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள்”, என்றுரைத்த அவர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்தின் “கண்களாகவும் காதுகளாகவும்” செயல்பட முன்னாள் இராணுவத்தினர் தயார் என்றும் சொன்னார்.

ரோஸ்மாவைக் குறைசொல்வதை நிறுத்துக

பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பற்றி “அதுவும் இதுவும்” சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முகம்மட் அலி வலியுறுத்தினார்.

“ரோஸ்மா ரிம24மில்லியனுக்கு மோதிரம் வாங்கினார், அதை வாங்கினார் இதை வாங்கினார் என்றெல்லாம் சொல்லித் திரிகிறார்கள்.

“ரோஸ்மா(இடம்) நாட்டுக்கு பல நல்லதைச் செய்திருக்கிறார்.

“வெளிநாடு செல்லும்போது அங்கு என்ன செய்கிறார் என்பது தெரியாது.ஆனால், நாடு திரும்பும்போது புதுப்புது கருத்துகளைக் கொண்டு வருகிறார்….மலேசியர்களின் முன்னேற்றத்துக்கு உதவுகிறார்”.

மக்கள், ரோஸ்மாவையும் நஜிப்பையும் குறை சொல்வதை விடுத்து அடிக்கடி தங்களை நேரடியாகச் சந்திக்க வரும் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும் என்றார்.