கெடா பாஸ் போர்முரசு கொட்டத் தொடங்கிவிட்டது.2008-இலிருந்து கெடாவின் மாநில அரசின் சாதனைகளை வாக்காளர்களின் கவனத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் அது மும்முரமாக இறங்கிவிட்டது.
இன்று கெடா கோட்டா சாராங்கில் நடைபெற்ற பாஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் கெடா அரசின் சாதனைகளை விவரிக்கும் அழகிய கையேடுகள் வழங்கப்பட்டன.நான்கு பக்கங்களைக்கொண்ட அக்கையேட்டில் கெடா பாஸ் மக்களின் நன்மைக்காக அமல்படுத்திய 42 கொள்கைள் பட்டியல் இடப்பட்டிருந்தன.
அதன் பக்கத்திலேயே முந்தைய பிஎன் மாநில அரசுகள் மக்களுக்கு எதையெல்லாம் செய்யவில்லை என்பதும் பட்டியலிடப்பட்டிருந்தது.
அரசாங்கத் தொடர்புகொண்ட நிறுவனங்களின் இயக்குனர் வாரியங்களில் உறுப்புவகிக்கும் மந்திரி புசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் அல்வன்ஸ் தொகை குறைக்கப்பட்டதை அது சுட்டிக்காட்டியது.
இது போக மாநில அரசின் மற்ற சாதனைகளாவன:
-வெட்டுமரத் தொழில் வருமானத்தை 2008-இல் ரிம35மில்லியனாக இருந்ததை, 2009-இல் ரிம38மில்லியனாகவும்,2010-இல் ரிம53மில்லியனாகவும் 2011-இல் ரிம80மில்லியனாகவும் உயர்த்தியது;
-குறைந்தபட்ச சமூகநல உதவித் தொகையை ரிம75இலிருந்து ரிம150ஆக உயர்த்தியது;
-நிலவரியில் 25-75விழுக்காடு குறைத்தது(பிஎன் ஆட்சியில் 2006-இல் அது 300விழுக்காடு உயர்த்தப்பட்டிருந்தது;
-நிலத்தை அகப்படுத்துவதாக இருந்தால் மக்களின் நன்மைக்காகவே அதைச் செய்வது என்ற நிலைப்பாடு உறுதிசெய்யப்பட்டது, பிஎன் ஆட்சியில் வணிக காரணங்களுக்காக அது செய்யப்பட்டது.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், கெடா ஆணையரும் மந்திரி புசாருமான அசிசான் அப்துல் ரசாக், கட்சி தலைமைச் செயலாளர் முகம்மட் சாபு,உதவித் தலைவர் மாபுஸ் ஒமார்,சலாஹுடின் ஆயுப் முதலியோரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கெடா பாஸ் ஏற்பாடு செய்துள்ள ஒரு-நாள் நிகழ்வான அதில் இரவு எட்டு மணிக்கு ஹாடியும் கட்சியும் ஆன்மிகத் தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அப்துல் அசீஸ் நிக் மாட்டும் முக்கிய உரை நிகழ்த்துவார்கள்.
முஸ்லிம்-அல்லாத ஆதரவாளர் பாராட்டு
அக்கூட்டத்தில் பேசிய பாஸ் ஆதரவாளர் காங்கிரசின் தலைவர் ஹு பாங் செள, அந்த இஸ்லாமியக் கட்சியைப் புகழ்ந்துரைத்தார்.அதன் தலைவர்கள் வாக்குகளுக்காக கொள்கைகளை விற்றவர்கள் அல்லர் என்றாரவர்.
“கட்சி, போராட்டத்தைத் தொடங்கிய நாளிலிருந்து அதன் கொள்கைகளை மாற்றிக்கொண்டதில்லை”, என்றவர் கூறியதைக் கூட்டத்தினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.