நாட்டின் 13வது பொதுத் தேர்தல் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என்ற ஊகங்கள் மீது பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தமது வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது வெற்றியை உறுதி செய்வதற்கு முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக் காலமான செப்டம்பர் மாதத்தில் தேர்தலை நடத்துவது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடும் என அப்துல் ஹாடி சொன்னார்.
தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் ஆளும் அம்னோ கட்சி வாக்காளர் பட்டியலைத் தூய்மை செய்ய வேண்டும் என்ற உண்மையான பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதே உண்மையான பிரச்னை ஆனால் அம்னோ அதனைச் செய்ய விரும்பவில்லை. நஜிப் தமது வெற்றியை உறுதி செய்வதற்கான வாய்ப்புக்களைத் தேடுகிறார். ஹஜ் காலத்தில் தேர்தலை நடத்துவதும் அதில் ஒன்றாகும்.”
“பாஸ் ஆதரவாளர்களில் பலர் அந்த நேரத்தில் ஹஜ் பயணத்தை மேற்கொண்டு வெளியில் இருப்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்,” என மாராங் எம்பி-யுமான ஹாடி குறிப்பிட்டார்.
கோத்தா டாருல் அமானில் உள்ள கெடா பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற PAS Munirat dan Himpunan Hijau ke Putrajaya நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
முஸ்லிம் ஐக்கியத்தை நிலைநிறுத்த அம்னோவுடன் கலந்துரையாடலை நடத்துவது பற்றி பாஸ் பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
நஜிப்பின் நாள் குறிப்பேட்டில் வெளிநாட்டுப் பயணங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் செப்டம்பர் மாதத் தொடக்கத்திலேயே தேர்தல்கள் நிகழும் என தி ஸ்டார் நாளேடு அண்மையில் ஆரூடம் கூறியிருந்தது.
ஜுலை நோன்பு மாதமாகும். ஆகஸ்ட் முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் நிகழும். செப்டம்பர் மாத இறுதியில் பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்றும் காரண ஹஜ் காலம் தொடங்கி விடும் என்றும் அந்த ஏடு குறிப்பிட்டது. அக்டோபர் இறுதியில் தான் ஹஜ் காலம் நிறைவுக்கு வரும்.
அலோர் ஸ்டார் கோத்தா டாருல் அமான் அரங்கில் இன்று காலை நிகழ்ந்த கூட்டத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இன்று பிற்பகலும் மாலையிலும் நிகழும் கூட்டங்களில் இன்னும் அதிகமான மக்கள் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.