மை டாப்தார் தோல்வி என பிகேஆர் வருணனை; அது நாடற்றவர்களுக்கு ‘பயனில்லாத’ ஆவணங்களை வெளியிடுகிறது

மை டாப்தார் இயக்கத்தை இன்று சாடிய பிகேஆர், மலேசியாவில் பிறந்தும் நாடற்றவர்களாக இருக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்யும் இலக்கில் தோல்வி கண்டு விட்டதாகக் கூறியுள்ளது.

அந்த கூற்றுக்கு ஆதரவாக பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் அனாதைகளாக இருக்கும் இரண்டு நாடற்ற சிறுவர்களுடைய விவரங்களை வெளியிட்டார்.

அந்த இரு சிறுவர்களும் எதிர்நோக்கும் அவலத்தை மை டாப்தார் இயக்க ஏற்பாட்டாளர்கள் விளம்பரப்படுத்திய பின்னர் அவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த ஆவணங்கள் ‘பயனற்ற பத்திரங்கள்’ என சுரேந்திரன் சொன்னார்.

அவர்களுடைய குடியுரிமைத் தகுதி ‘இன்னும் உறுதி செய்யப்படவில்லை’ என அந்த ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் விளைவாக அவர்கள் தேசிய அடையாளக் கார்டைப் பெற முடியாது. பள்ளிக்கூடத்திலும் சேர முடியாது என சுரேந்திரன் விளக்கினார்.

“9,529 பேருக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டதாக அவை (தேசியப் பதிவுத்துறை, பிஎன், மஇகா) சொல்கின்றன. அந்த ஆவணங்களைத்தான் அவர்கள் சொல்கிறார்களா ? நாம் இப்போது இன்னொரு பெரிய மோசடிக்கான ஆதாரத்தைக் காண்கிறோம்,” என்றார் அவர்.

அந்த இரண்டு அனாதைச் சிறுவர்களும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் கண்டு பிடிக்கப்பட்டதாக அந்த இரு சிறுவர்களும் இப்போது வசித்து வரும் அகஸ்தியர் இல்லத்தின் தொண்டரான ஆர் மோகன்தாஸ் கூறினார்.

அவர்களுடைய கடந்த காலம் பற்றி எதுவும் தெரியாது. ஹரிக்கு இப்போது வயது 14 என்றும் ஹரனுக்கு 12 வயது என்றும் ஊகிக்கப்படுகிறது. அந்த இல்லத்தில் உள்ள தொண்டர்கள் அவர்களுக்குப் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.

நாடற்ற இந்தியர்களை அடையாளம் காணவும் பதிவு செய்யவும் பிரதமர் துறையும் உள்துறை அமைச்சும் இணைந்து கூட்டாக நாடு முழுவதும் மை டாப்தார் இயக்கத்தை நடத்தின. 

தேசியப் பதிவுத் துறைத் தலைவர் குறை கூறப்பட்டார்

மலேசியாவில் 300,000 நாடற்றவர்கள் இருப்பதாக பிகேஆர் விடுத்த அறிக்கையை மறுத்துள்ள தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர் ஜாரியா முகமட் சைட்-டையும் சுரேந்திரன் குறை கூறினார்.

ஜாரியாவின் மறுப்புச் செய்தி இன்று தமிழ் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

“அது துணிச்சலான அறிக்கை. ஆனால் ஆதாரமற்றது. அவர் அதனை வெறுமனே மறுத்துள்ளார். எங்கள் அறிக்கை மக்கள் தொகை ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது,” என்றார் சுரேந்திரன்.

“சிவப்பு அடையாளக் கார்டும் ( நிரந்தர வசிப்பிடத் தகுதியைக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் கார்டு) ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகும். நீங்கள் வாக்களிக்க மட்டும் முடியாது,” என ஜாரியா விடுத்துள்ளதாகக் கூறப்படும் அறிக்கையையும் அவர் குறை கூறினார்.

அவர்களைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கு சிவப்பு மை கார்டுகளை கொடுத்தால் போதுமா ? அவர்கள் அதனைக் கொண்டு பள்ளிக்கூடம் போக முடியாது. பொருத்தமான வேலைகளில் சேர முடியாது. அவர்கள் பல்கலைக்கழகத்துக்குப் போக முடியாது. ஆனால் ஜாரியாவுக்கு அது பற்றிக் கவலை இல்லை,” என்றார் சுரேந்திரன்.

அந்த 300,000 பேரை தேசியப் பதிவுத் துறைக்குக் கொண்டு வருமாறு சவால் விடுப்பதற்குப் பதில் ஜாரியா, முறையான ஆவணங்கள் இல்லாத நபர்களுக்கு நீல நிற அடையாளக் கார்டுகளை வழங்குவது மீதான தேசியப் பதிவுத் துறையின் கொள்கையை விளக்க வேண்டும். தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஒரு கொள்கை இல்லை என்றால் அதனை உருவாக்க வேண்டும் என பிகேஆர் சட்டப் பிரிவு இயக்குநர் லத்தீபா கோயா கூறினார்.

அவர்கள் கூட்டரசு அரசமைப்பின் 19வது பிரிவின் கீழ் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் அல்ல அவை என்றும் தங்களை குடிமக்களாக அங்கீகரிப்பதற்கான ஆவணங்களுக்கான விண்ணப்பங்களே அவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பிர்சனையின் பின்னணியை விளக்குமாறு சுரேந்திரனிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர் நாடற்றவர்கள் பிரச்னை எல்லா இனங்களிலும் குறிப்பாக ஒதுக்குப் புறமான பகுதிகளில் நிலவுவதாக சொன்னார்.

என்றாலும் மலேசிய இந்தியர்களிடையே அந்தப் பிரச்னை கடுமையாக உள்ளது. ஏனெனில் அவர்களில் பலர் முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள். அந்தத் தோட்டங்கள் மூடப்பட்ட போது அவர்கள் நிலைகுலைந்து விட்டனர்.