அரசாங்கம் ஜிஎஸ்டி என்ற பொருள், சேவை வரியை “பெரும்பாலும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர்” அமலாக்குவது பற்றி பரிசீலித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
அவர் நேற்றிரவு கோலாலம்பூரில் போர்பஸ் குளோபல் நடத்திய தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டின் விருந்து நிகழ்வில் உரையாற்றினார். அந்த வரியை அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஏற்கனவே வருமான வாரியத்துக்குப் பணிக்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார். ஆகவே அந்த வரியை எப்போது நடப்புக்குக் கொண்டு வருவது என்பது தான் இப்போதைய பிரச்னை.
“ஜிஎஸ்டி வரியை நாங்கள் அறிமுகம் செய்வோம் என கொள்கை அளவில் அறிவித்து விட்டோம் அதனை நாங்கள் அமலாக்குவதற்கு உதவியாக, முறைகளை உருவாக்குமாறு வருமான வாரியத்துக்குப் பணித்துள்ளோம்.’
“நீங்கள் எந்த முறையை அறிமுகம் செய்தாலும் அது எவ்வளவு நன்றாக தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் அமலாக்கத்தில் பலவீனங்களும் தேக்கங்களும் இருக்கவே செய்யும்.”
“சரியான நேரம் வரும் போது, எதிர்காலத்தில், பெரும்பாலும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாங்கள் ஜிஎஸ்டி-யை அறிமுகம் செய்வோம்,” என நஜிப் சொன்னார்.
என்றாலும் எப்போது தேர்தலை அவர் நடத்துவார் என போர்பஸ் சஞ்சிகையின் தலைவர் ஸ்டீவ் போர்பஸ் கேள்வி எழுப்பிய போது தாம் இன்னும் சரியான நேரத்தை “பார்த்துக் கொண்டிருப்பதாக” பிரதமர் சொன்னார்.
ஜிஎஸ்டி பற்றி மக்கள் புரிந்து கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கருதுகிறார்.
மலேசியாவில் 1.2 மில்லியன் மக்கள் மட்டுமே வருமான வரியைச் செலுத்துகின்றனர். இந்த நாட்டின் வரி அடித் தளம் மிகவும் சிறியது. அது நாட்டை கடன் நெருக்கடிக்கு கொண்டு சென்று விடக் கூடும் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
உதவித் தொகைகளை “படிப்படியாக” குறைப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். என்றாலும் அது வாழ்க்கைச் செலவுகள் கூடுவது மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை உணர்ந்துள்ளது.
மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் போது ஆளும் ஆட்சிகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதாகவும் அவர் சொன்னார்.
“இஸ்ரேல் போன்ற நாடுகளில் 300,000 பேர் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரபு புரட்சிகளுக்கு வேலையில்லாத் திண்டாட்டமும் வாழ்க்கை செலவு அதிகரிப்பும் வித்திட்டு விட்டன.”
View Comments (13)