நாம் அவசரம் காட்ட வேண்டிய விசயங்களில் பாரிசானை அரசியல் நடத்த அனுமதிக்ககூடாது. புதிய ஆறு தமிழ்ப்பள்ளிகள் மீது பிரதமரின் அறிவிப்பை மீண்டும் –மீண்டும் அமைச்சர்கள் மாறி-மாறி அறிவிப்பு செய்வதிலும், தமிழ்ப்பள்ளிகளுக்கான 100 மில்லியன் ரீங்கீட் மானியத்திற்கான மாதிரி காசோலைகளை எல்லா இந்தியச் சமுதாய நிகழ்வுகளிலும் காட்டி இந்தியச் சமுதாயத்தின் அறிவாற்றலை பாரிசான் அரசாங்கம் எடை போடக்கூடாது. இது பசியில் கதறும் பிள்ளைக்கு மிட்டப் பொம்மைகளைக் காட்டுவதுபோல் உள்ளது என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
இந்த ஆறு தமிழ்ப்பள்ளிகளுக்கான அறிவிப்புகளுடன் உடனடியாக அதற்கான அடிப்படை வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அறிவிப்புகள் மட்டும் மாறி-மாறி வந்துகொண்டு இருக்கின்றன. காரியம் ஏதும் நடந்த பாடிலில்லை என்றாரவர்.
அதேபோன்று தமிழ்ப்பள்ளிகளுக்கான 100 மில்லியன் வருகிறது என்று தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைப் பிரதமரும் ,துணைபிரமரும், ம.இ.கா அமைச்சர்களும் கலந்துகொள்ளும் சமுதாய நிகழ்வுகளுக்கு அழைத்துச்சென்று மாதிரி காசோலைகளை எடுத்து வழங்குவதிலும் நிழல்படம் எடுத்துக்கொள்வதிலும் காட்டும் ஆர்வத்தை பணம் பட்டுவா செய்வதில் காட்டுவதில்லை என்பதை சேவியர் சுட்டிக் காட்டினார்.
தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களை எத்தனை முறைதான் ஏமாற்றுவீர்கள். தலைமை ஆசிரியர்களை அணுகி, “நீங்கள் மாதிரி காசோலைகளை வாங்கிய படத்தில் இருந்தீர்கள், உங்கள் பள்ளிக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்று கேட்டால், எங்கள் பள்ளிக்கு மானியம் இருக்கா இல்லையா என்றுகூடத் தெரியவில்லை, எவ்வளவு கிடைக்கும் என்று எப்படிக் கூறுவது” என்கிறார்கள். இன்னும் எத்தனை முறை அவர்களைக் கொண்டு சென்று திருப்பி அனுப்புவதாக இருக்கின்றீர்கள் என்று அவர் வினவினார்.
ஒரு பக்கம் மானிய நாடகம். மறுபக்கம் தமிழ்ப்பள்ளிகளின் கூரைகளும் கட்டடங்களும் ஒவ்வொன்றாகச் சரிந்த வண்ணம் இருப்பதை ம.இ.கா அமைச்சர்கள் பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லக்கூடாதா என்று கேட்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் ஓர் அரசாங்கப் பள்ளியான சுபாங்கிலுள்ள ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளி, அடுத்து செர்டாங் யூ.பி.எம் தமிழ்ப்பள்ளி, இப்பொழுது காப்பார் ஜாலான் ஆக்கோ தமிழ்பள்ளி என ஒவ்வொன்றாக அதன் கூரைப் பகுதிகளைக் கரையானிடம் இழந்து வருகின்றன.
நல்ல காலம், இவ்வேளைகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆபத்துகளிலிருந்து தப்பித்து வருகின்றனர். ஆக, பிரதமர் நூறு மில்லியன்களை அறிவித்த இந்தக் குறுகிய காலத்திலேயே சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் கூரைகளை மூன்று தமிழ்ப்பள்ளிகள் இழந்துள்ளன. நாட்டில் மற்றப் பகுதிகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் நிலை பற்றிய விவரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் இதைவிட மோசமாக இருக்கும் என நம்பலாம். பாதிக்கப்பட்ட இம்மூன்று பள்ளிகளில் இரண்டுக்கு அவசர நிதியாக தலா 50 ஆயிரம் ரீங்கிட்டை சிலாங்கூர் மாநில அரசு வழங்கியுள்ளது. மூன்றாவது, காப்பார், ஜாலான் ஆக்கோப், பள்ளிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஆகையால், இந்தியர்களை இனியும் ஏமாற்றாமல் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்களை உடனடியாகப் பட்டுவாடச் செய்யவேண்டும் எனப் பிரதமரை அமைச்சர்கள் வற்புறுத்தவேண்டும். அரசியலுக்கும் தேர்தலுக்கும் அப்பற்பட்டது நமது பிள்ளைகளின் கல்வியும் அவர்களின் எதிர்காலமும். அடுத்த தேர்தலுக்குள் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.