மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) பரிந்துரைத்த 22-அம்ச தேர்தல் சீரமைப்புகளை நடைமுறைப்படுத்த காலவரையறையையும், செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நிர்ணயிக்க ஒரு கண்காணிப்புக் குழுவை நாடாளுமன்றம் அமைக்க வேண்டும் என்று என்ஜிஓ ஒன்று விரும்புகிறது.
தேர்தல் சீரமைப்புமீது கலந்துரையாடல் நடத்திய மனித உரிமை ஊக்குவிப்புச் சங்கம்(ப்ரோஹாம்) அதில் எடுக்கப்பட்ட முடிவை வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணைய(இசி)த்திடம் வழங்கியபோது இவ்வாறு வேண்டிக்கொண்டது.
மே21-இல் நடைபெற்ற அக்கலந்துரையாடலில் 25பேர் கலந்துகொண்டு பிஎஸ்சி-இன் 22அம்ச சீரமைப்புகள் மீது கருத்துரைத்தனர்.
இசியும் அரசாங்கமும் தேர்தல் சீரமைப்புகள்மீதுதான் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ப்ரோஹாம், ஏப்ரல் 28 பெர்சே 3.0பேரணி விவகாரங்களால் அவற்றின் கவனம் திசைமாறிப் போகக்கூடாது என்று கேட்டுக்கொண்டது.
கண்காணிப்புக் குழுவுடன் மேற்பார்வையிடும் பிரிவு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்.அதில் இசி-இன் பிரதிநிதிகள், பெர்சே,மலேசியாவில் சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்குப் போராடும் அமைப்பான மேப்ரல், திண்டாக் மலேசியா முதலிய சமூக அமைப்புகளின் பேராளர்களும் இடம்பெற வேண்டும்.
“அப்பிரிவு 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக குறுகிய காலத்தில் வாக்காளர் பட்டியல் சீர்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்யும்”, என ப்ரோஹோமின் நெறியாளர் ராமோன் நவரத்தினம்(இடம்) குறிப்பிட்டார்.
வாக்காளர் பட்டியலில் உள்ள சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை “ஒரு மாதத்துக்குள்”
அப்புறப்படுத்த அப்பிரிவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்.அதற்கு இடமளிக்க சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று ப்ரோஹாம் குறிப்பிட்டது.
இசியுடனான சந்திப்பின்போது ப்ரோஹாம் வாக்காளர் பட்டியலில் காணப்படும் முறைகேடுகள் பற்றியும் கேள்வி எழுப்பியது.ஜோகூர் பாரு, கம்போங் மலாயு மஜிடியில் வீட்டு முகவரி இன்றி வெளிநாட்டுப் பெயர்களைக்கொண்ட 50பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருப்பது முதலியவை அதில் அடங்கும்.
3,457 வாக்காளர்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் தொகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதையும் ஆராய வேண்டும் என்று அந்த என்ஜிஓ வலியுறுத்தியது.
முன்மொழியப்பட்டவற்றைப் பரிசீலிப்பதாக இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார் என்று ப்ரோஹாம் தெரிவித்தது.அத்துடன் கண்காணிப்புக் குழுவை நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸின் கீழ் அலுவலகத்தின்கீழ் அமைக்கலாம் என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே,ஜூன் முதல்நாள் தொடங்கி ஒருமாதகாலம் நடத்தப்படும் இயக்கத்தின்போது புதிதாக பதிவுசெய்துகொண்டிருக்கும் 12.6மில்லியன் வாக்காளர்கள் அவர்களின் விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் இசி கூறியுள்ளது.