ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிக் கொள்முதல் ஊழல் தொடர்பாக நடத்தப்படும் பிரஞ்சு விசாரணையில் இந்த நாட்டுக்கு எதிராக அண்மையில் கூறப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் மீது தொடர்ந்து மௌனமாக இருப்பது, அந்தக் கூற்றுக்களுக்கு ஆதாரம் இருப்பதற்கான அறிகுறி என டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கூறுகிறார்.
“சட்ட அடிப்படையில் பார்த்தால் அந்த பிரஞ்சு விசாரணையில் பங்கு கொள்ளத் தவறுவதும் மலேசியாவுக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுக்காமல் இருப்பதும் அவற்றை ஒப்புக் கொள்வதாகவும் பதில் அளிக்க அச்சப்படுவதாகவும் கருதப்படும்.”
“நிச்சயமாக நாம் விரும்புவது அதனை அல்ல,” என்று கோபிந்த் இன்று விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் சமர்பித்த வேண்டுகோளுக்கு இணங்க மலேசியாவுக்கு இரண்டு ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகள் விற்கப்பட்டது மீது பாரிஸில் இயங்கும் டிசிஎன்எஸ் என்ற நிறுவனம் மீது ஊழல் விசாரணையை பிரஞ்சு நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
அந்த விசாரணைக்கு உதவ “எப்போதும் தயாராக இருப்பதாக” அறிவித்த தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி, பிரஞ்சு விசாரணை தொடங்கியதும் தமது நிலையை மாற்றிக் கொண்டார். அந்த விசாரணையில் தாமோ அல்லது அமைச்சின் எந்தப் பேராளாருமோ பங்கு கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்து விட்டார்.
“நஜிப்புக்கு அதனை விளக்க வேண்டிய கடமை உள்ளது”
“பொது நிதிகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் மலேசிய அரசாங்க அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டனர் என்ற எண்ணத்தைப் போக்கி நாட்டின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்கு தமது நிர்வாகம் அந்த விசாரணைக்கு எல்லா வகையான உதவிகளையும் ஏன் வழங்கவில்லை என்பதை மலேசிய அரசாங்கத் தலைவர் என்ற முறையில் விளக்குவது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கடமையாகும்,” என்றார் கோபிந்த்.
இந்த நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி என்ற ரீதியில் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல், அந்த விவகாரம் மீது பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் தமது பரிந்துரையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றவர்கள் மீது அந்த விசாரணை மூலம் தெரிய வரும் விஷயங்கள் பற்றி சட்டத்துறைத் தலைவர் அக்கறை கொள்ளவில்லையா ?” என கோபிந்த் மேலும் வினவினார்.
“அப்படி ஏதும் இருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பது பற்றிப் பரிசீலிக்க சட்டத்துறைத் தலைவர் தயாராக இல்லையா ?”
ஸ்கார்ப்பியோன் விசாரணை தேசிய அக்கறைக்குரிய விஷயமாக மாறி விட்டதாக கோபிந்த் மேலும் குறிப்பிட்டார். ஆகவே பிரஞ்சு விசாரணையில் ஏற்கனவே வெளி வந்துள்ள தகவல்களைப் பார்க்கும் போது அது குறித்து மௌனமாக இருப்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல என்றும் அவர் சொன்னார்.
ஸ்கார்ப்பியோன் ரக நீர்முழ்கிகளுக்கான கொள்முதல் ஆணை பற்றிய அரச மலேசியக் கடற்படையின் மதிப்பீட்டு அறிக்கை மீதான மிகவும் ரகசியமான ஆவணங்களை Terasasi (Hong Kong) Sdn Bhd என்ற நிறுவனம் விற்றுள்ளதாக கூறப்படுவது அந்த பிரஞ்சு விசாரணை வழி அண்மையில் தெரிய வந்துள்ள தகவலாகும்.
அந்த Terasasi நிறுவனத்தின் இயக்குநர் அப்துல் ரசாக் பகிந்தா ஆவார். அவர் நஜிப்பின் நெருங்கிய நண்பர் ஆவார்.