மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்ற குழப்பங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து தலைவருக்குரிய பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“நான் அறிந்தவரை அன்வார் வன்முறையை நாடுபவர் அல்லர்.
“அவர் தலைவருக்குரிய பண்பை வெளிப்படுத்த வேண்டும். கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்”.இன்று காலை கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது ரயிஸ் இவ்வாறு கூறினார்.
தேர்தலில் தோற்றால் பக்காத்தான் ரக்யாட் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அதற்கு முன்னோட்டமாக நடத்தப்பட்டதுதான் ஏப்ரல் 28 பெர்சே 3.0பேரணி என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பதுடன் தாம் உடன்படுவதாக அமைச்சர் சொன்னார்.
வரும் தேர்தலில் பக்காத்தான் தோற்றால், புத்ராஜெயாவைக் கைப்பற்ற வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என மகாதிர் கூறியிருப்பதை நேற்றுத் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் ஒத்துக்கொண்டார்.
“அவர்கள்(பக்காத்தான்) தோற்றால் இந்தத் தந்திரத்தைத்தான் நாடுவார்கள்.ஆனால், அது பலிக்காது”, என்று ரயிஸ் கூறினார்.
அரபு நாடுகளில் வெடித்த மக்கள் எழுச்சியைப் போல் இங்கும் ஆர்ப்பாட்டம் செய்யப் பார்க்கிறார்கள் என்று கூறிய அவர் சுதந்திர நாடான மலேசியா அதற்கென சொந்த அரசியல் கலாச்சாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
தேர்தல் நடைமுறைகளில் சீரமைப்புத் தேவை என்று வலியுறுத்தி வருவதற்காகவும் மாற்றரசுக் கட்சியை ரயிஸ் கண்டித்தார்.
“பினாங்கை எப்படி வென்றார்கள்?கிளந்தானை, சிலாங்கூரை, கெடாவை, கோலாலம்பூரை எல்லாம் எப்படி வென்றார்கள்?
“உண்மைகளைச் சொல்கிறோம் என்று பொய் சொல்லக்கூடாது, செய்திகளைத் திரித்துக்கூறக் கூடாது”, என்று ரயிஸ் கூறினார்.
வார இறுதியில் கெடாவில் பாஸ் நிகழ்வில் 50,000பேர் திரண்டார்களே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ரயிஸ் கருத்துரைக்க மறுத்தார்.