‘நான் பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு “ஊக்கத்தை” (‘motivating’) மட்டுமே அளித்தேன்

தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்து ஒரு மாதம் முடிந்து விட்டது. ஆனால் அதன் தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மீது விழுந்த தூசி இன்னும் போகவில்லை.

அந்தப் பேரணிக்குப் பிந்திய சர்ச்சைகளில் அஸ்மின் தலை உருண்டது. அவர் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டி விட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது ஏப்ரல் 29ம் தேதி காலை தொடக்கம் பழி சுமத்தப்பட்டது.

அந்தப் பேரணியைத் தொடர்ந்து பதவி துறக்குமாறு அவருக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவர், டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த தடையை மீறுமாறு தூண்டி விடும் நோக்கம் தமக்கு இல்லை என அவர் சொன்னார்.

அந்த தடையை மீறுமாறு தூண்டி விட்டதாகக் கூறும் குற்றச்சாட்டை மறுத்து அவரும் பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிமும் நெகிரி செம்பிலான் பிகேஆர் தலைவர் பத்ருல் ஹிஷம் ஷாஹாரினும் விசாரணை கோரியுள்ளனர்.

தாம் அந்த நேரத்தில் கூட்டத்தினருக்கு “ஊக்கத்தை” மட்டுமே அளித்தேன் என கோம்பாக் எம்பி-யுமான அஸ்மின் சொன்னார்.

“நிச்சயமாக அந்த நேரத்தில் மலேசியர்கள் என்ற முறையில் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் எழுந்து நின்று போராடவும் எங்கள் உறுப்பினர்களுக்கும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் ஊக்கம் அளிக்க வேண்டும்.”

தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடுவது ஒரு குற்றமா ?” என அவர் வினவினார்.

டாத்தாரான் தடை மீறப்பட்டது தேர்தல் மோசடி எனக் கூறப்படுவது போன்ற ‘கடுமையான குற்றமாக” எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது மீது ஆத்திரமடைந்துள்ள அஸ்மின், உண்மையில் தாம் போலீஸ் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்ட பின்னரே தாம் பேசியதாகத் தெரிவித்தார்.

“கூட்டத்தினருக்கு உரையாற்றுமாறு என்னிடம் போலீசார் கூறினர்”

உண்மையில் கூட்டத்திரைச் சாந்தப்படுத்துமாறு ஒர் “உயர் நிலைப் போலீஸ் அதிகாரி” ஒருவர் என்னைத்தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டார் என அஸ்மின் குறிப்பிட்டார்.

“கூட்டத்தினர் நிச்சயமாக அதிகாரிகள் சொல்வதைக் காட்டிலும் தலைவர்கள் (அரசியல்) கூறுவதற்குச் செவி சாய்ப்பர். அந்த தடைக்குப் பொறுப்பேற்றுள்ள உயர் நிலைப் போலீஸ் அதிகாரி ஒருவர் கூட்டத்தினரிடையே உரையாற்றுமாறும் அவர்களை சாந்தப்படுத்துமாறும் என்னைக் கேட்டுக் கொண்டார். அதனால் தான் நான் பேசினேன்.”

எங்களுக்கு (அரசியல்வாதிகள்) இங்கு பங்கு உண்டு. அதாவது ஆர்ப்பாட்டம் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்வதாகும்,” எனக் கூறிய அஸ்மின், அந்தப் பேரணியை எதிர்க்கட்சிகள் கடத்த முயன்றதாகக்  கூறப்படுவதை நிராகரித்தார்.

டாத்தாரானிலில் கூடுவது தான் அரசு சாரா அமைப்பான பெர்சே-யின் நோக்கமாக இருந்தது என வலியுறுத்திய அவர், தடையை  மீற வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தாம் உத்தரவுகளை பின்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“தடையை மீறுமாறு எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை. டாத்தாரானில் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 4 மணி வரையில் கூடுமாறு மட்டுமே ஆணையிடப்பட்டிருந்தது. மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அந்த புரிந்துணர்வுடன் தான் வந்தார்கள்,” என்றார் அஸ்மின்.

தடை மீறப்படுவதற்கு முன்னர் தலைமைத்துவத்த் வழங்க தாம் முன் வந்ததாக கூறிய அவர், ஆனால் கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டதும் எல்லாம் காற்றில் பறந்து விட்டதை ஒப்புக் கொண்டார்.

“எல்லோரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முனைந்தனர். நான் அங்கு ஏதோ ஒரிடத்தில் இருந்தேன். எங்கு என்பது எனக்கு நினைவில்லை. என்னை நோக்கி இரண்டு முறை கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அவை எனக்கு மிக அருகில் விழுந்தன. மிகவும் வலியாக இருந்தது. என்னால் மூச்சு விட முடியவில்லை.”

“நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றேன். நான் ஜாலான் துன் பேராக்கை நோக்கி நடந்து ஜாலான் சுல்தான் இஸ்மாயிலைச் சென்றடைந்தேன். நான் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் இல்லை. பின்னர் நான் வீட்டுக்கு சென்றேன்.”

‘பெர்சே வெற்றி அடைந்தது’

பெர்சேயைக் களங்கப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்தப் பேரணி மூலம் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அஸ்மின் கருதுகிறார்- குறிப்பாக தேர்தல் குற்றங்கள் சட்ட மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதும் அதில் அடங்கும்.

அந்த திருத்த மசோதா குறித்து பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு எதுவும் தெரிவிக்கப்படாதது, தேர்தல் ஆணையத்தின் நோக்கங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த அஸ்மின் சொன்னார்.

பிஎஸ்சி-யில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை சம்பந்தப்படுத்தும் மசோதாவைச் சமர்பிப்பதற்குப் பதில் அரசியல் கட்சிகளின் கண்காணிப்பைக் கட்டுப்படுத்த முயலும் மசோதா ஒன்றைத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.

“அது ஏமாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இறைவனுக்கு நன்றி. நல்ல வேளையாக அரசாங்கம் அந்த மசோதாவை மீட்டுக் கொண்டது. திருத்தங்கள் செய்யப்படவில்லை. பெர்சே 3.0 நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையே அது காட்டுகிறது..” என்றார் அவர்.

“போலீஸ் ரோந்துக் கார் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கும் படத்தை அன்றாடம் பிஎன் தொடர்புடைய ஊடகங்கள் ஒளிபரப்புவது மக்கள் மத்தியில் அந்த இயக்கத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தாதா ?” என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

“அந்த ஊடகங்களும் தொலைக்காட்சியும் அம்னோவுக்கு சொந்தமானவை. அதனால் என்ன நடந்தது என்பது பற்றி நியாயமான விளக்கத்தை அவை தரும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவை எதிர்க்கட்சிகளுக்கான இடத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதோடு பொது மக்களிடமும் பொய் சொல்கின்றன.”

“அங்கு 300,000 பேர் இருந்தார்கள். அவர்கள் தங்கள் கிராமங்களுக்கும் சொந்த மாநிலங்களுக்கும் திரும்பிச் சென்று நடந்ததை சொல்வார்கள். அவர்கள் தான் உண்மையை எடுத்துரைக்கின்றவர்கள்.”