“திருப்பிக் கொடுக்காதீர்கள், அவர்கள் விரும்பினால் உங்கள் மீது வழக்குப் போடட்டும். ஆனால் நீங்கள் மற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பிடிபிடிஎன் கடனுக்கு அவசியமில்லை.”
கடந்த சனிக்கிழமை இரவு தமது கோட்டையான பெர்மாத்தாங் பாவ்-வில் கூடிய 10,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த செய்தி அதுவாகும்.
பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்பட்டு பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தை ஒர் ஆண்டுக்குள் ரத்துச் செய்யப்படும் என்றும் அவர் கூறிக் கொண்டார்.
அந்தக் கடன் திட்டத்துக்குப் பதில் எல்லா மலேசியர்களுக்கும் தொடக்கப்பள்ளி நிலையிலிருந்து உயர் கல்வி வரையில் இலவசக் கல்வி அறிமுகம் செய்யப்படும் என அவர் சொன்னதாக சீன மொழி நாளேடான சின் சியூ டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் பெட்ரோல் விலைகள் குறைக்கப்படும் என்றும் அன்வார் கூறினார்.
அவர் தமது கூற்றுக்கு ஆதரவாக துருக்கியை எடுத்துக் காட்டினார். அந்த நாட்டு எண்ணெயை உற்பத்தி செய்யவில்லை. ஆனால் அதன் அரசாங்கம் தொடக்கப்பள்ளி நிலையிலிருந்து உயர் கல்வி வரையில் இலவசக் கல்வியை இரண்டு ஆண்டுகளில் அறிமுகம் செய்து விட்டது.
ஆகவே எண்ணெய் வருமானத்தை அதிகம் பெற்றுள்ள மலேசியா ஏன் துருக்கியைப் பின்பற்ற முடியாது என்பதற்கு காரணமே இல்லை என அன்வார் வாதாடினார்.
அரசாங்க நிதியுடன் தொடங்கப்பட்ட பிடிபிடிஎன் கடன் திட்டம் பட்டதாரிகளுக்கு சுமையாக மாறி விட்டதால் தாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் அந்த கடன் திட்டத்தை ரத்துச் செய்யப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்த பின்னர் அந்த பிடிபிடிஎன் விவகாரம் கடுமையான சர்ச்சைக்கு இலக்காகியது.
பிடிபிடிஎன் கடன் திட்டத்தை ரத்துச் செய்தால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு விடும் என பிஎன் கூறுகிறது.
பிடிபிடிஎன் எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்தும் பிகேஆர், பக்காத்தான் அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை அமைக்குமானால் இலவசமாக உயர் நிலைக் கலவியை வழங்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும் எனத் தெரிவித்துள்ளது.