அரசின் காப்பகங்களில் உள்ள ஆதரவற்றோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை

 அரசின் காப்பகங்களில் வளர்ந்த 1,758பேர் நாடற்ற மக்களாக இருப்பது ஏன் என்று உள்துறை அமைச்சுத்தான் விளக்க வேண்டும்.

அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று கேட்டுக்கொண்டார்.

“….இதற்குத் தீர்வுகாண்பது உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு”, என்று அவரைத் தொடர்புகொண்டபோது கூறினார்.

ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல்லப்படும் பிள்ளைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் பெற்றுத்தர சமூக நலத்துறை தவறிவிட்டது என சமூகநல நிறுவனமான பெர்தூபோஹான் கெபாஜிகான் டான் சோசியல் மலேசியா(Pertubuhan Kebajikan dan Sosial Malaysia )கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்ததன் தொடர்பில் சுரேந்திரன் அவ்வாறு கூறினார்.

அந்நிறுவனத்தின்  தலைவர் முகம்மட் கைருல் ஹபீஸ் அப்துல்லா- பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர்- அந்த ஆவணம் இல்லாததால் சிறிது காலம் தாமும் சிறையில் இருக்க நேரிட்டதாகக் கூறினார். அதன் பின்னர் அவர் மைகார்ட் பெற்று இப்போது குடியுரிமையும் பெற்றிருக்கிறார்.

இது, இந்திய சமூகத்தில் கணிசமான எண்ணிக்கையினருக்கு மைகார்ட் இல்லை. அதனால் குடியுரிமையும் இல்லை என்று பிகேஆர் கூறிவருவது உண்மை என்பதை நிரூபிக்கிறது என சுரேந்திரன் குறிப்பிட்டார்.

“அந்த என்ஜிஓ-வின் அறிக்கை நான் இதுவரை கூறிவந்தது உண்மை என்பதை மெய்ப்பிக்கிறது. இவர்களுக்கு யாரும் கிடையாது. இவர்கள் ஆதரவற்றோர். அதனால்தான் அவர்களிடம் குடிமக்கள் என்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை).

“அந்த என்ஜிஓ-வில் (நாடற்றவர்களாக) பதிவுசெய்யப்பட்டிருப்போர் எண்ணிக்கை 1,758 என்றால் இந்நாட்டில் பிறந்து இன்னமும் மைகார்ட் பெற்றிராதவர் பல்லாயிரக்கணக்கில் இருப்பர்.”

இதற்குமுன் சுரேந்திரன், குறைந்தது 300,000இந்திய மலேசியர்கள் சிவப்பு அல்லது பச்சை மைகார்டுகள்தான் வைத்திருக்கிறார்கள் என்றும் குடியுரிமை பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும் கூறியிருந்தார்.