பினாங்கு பிஎன் பொதுத் தேர்தலுக்கு உச்சக் கட்ட வேகத்தில் ஆயத்தமாகிறது

பினாங்கு பிஎன் 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. அது மாநிலத்தில் அனைத்து மூலை முடுக்குகளிலும் “போர் முரசு” கொட்டத் தொடங்கியுள்ளது.

அந்த ஏற்பாடுகளில் அனைத்து தொகுதிகளும் அவற்றின் தலைவர்களும் சம்பந்தப்பட்டிருப்பர் என மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் கூறினார்.

பிஎன் திட்டங்கள் பற்றியும் வியூகங்கள் பற்றியும் கூடிய விரைவில் தகவல்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் மாநில பிஎன் குழு முடிவு செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

“நாங்கள் அதனைச் செய்வதற்குப் பல அணுகுமுறைகளையும் வழிகளையும் தயாரித்துள்ளோம். நாங்கள் மாற்று ஊடகங்களையும் (இணைய தொடர்பாளர்கள்) முக்கிய நாளேடுகளையும் பயன்படுத்துவோம்,” என இன்று பிஎன் மாநிலக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை ஏற்ற பின்னர் அவர் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

தேர்தல் இயக்குநராக பிஎன் செயலாளர் ஒமார் பாவ்சா-வை நியமிக்கவும் கூட்டணி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநில பிஎன் குழு முடிவு செய்யும் அனைத்து திட்டங்களையும் வியூகங்களையும் ஒமார் அமலாக்குவதற்கும் கண்காணிப்பதற்கும் பொறுப்பேற்பார்.

இதனிடையே மாநில அரசும் பக்காத்தான் பேராளர்களும் தொடுக்கும் தாக்குதல்களுக்குப் பதில் அளிக்கவும் பிரச்னைகளை விளக்கவும் மாநில பிஎன் 40 இணையத் தொடர்பாளர்களை ( Cybertroopers) நியமித்துள்ளதாகவும் தெங் அறிவித்தார்.

பினாங்கு மக்களுக்கு நன்மை அளிக்காத விவகாரங்கள் பற்றி மாநில மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு அந்தத் தொடர்பாளர்களும் நாளேடுகளும் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

ஆனால் அது பற்றி மேல் விவரம் தருவதற்கு கெரக்கான் தலைமைச் செயலாளருமான தெங் மறுத்து விட்டார்.