தேர்தல் தேதி ரகசியம் மீது ஹாடி பிஎன்-னைச் சாடுகிறார்

அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதியை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பிஎன் -னை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சாடியுள்ளார்.

சர்வாதிகார நாடுகள் மட்டுமே நடப்பு அரசாங்கத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கு அப்படி இயங்கும் என அவர் சொன்னார்.

“ஒரே கட்சி முறையை பின்பற்றும் நாடுகள்-குறிப்பாக முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமே கடைசி நேரத்தில் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிக்கின்றன,” என அவர் விடுத்த அறிக்கை கூறியது.

“நடப்பு அரசாங்கம் பல தவறுகளைச் செய்துள்ள போதிலும் மக்கள் அதனை மீண்டும் தெரிவு செய்வதற்கு வாய்ப்புள்ள நேரம் தேர்தல் தேதியாக குறிக்கப்படுகிறது.”

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடைபெற வேண்டிய அடுத்த தேர்தலுக்கான தேதியை வெளியிடுவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தொடர்ந்து மறுத்து வருகிறார். அது கொக்க கோலா பானத்தை தயாரிப்பதற்கான வழியைப் போன்று ‘மிக ரகசியமானது’ என அவர் சொல்கிறார்.

குடிமக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் ஜனநாயக நாடுகளில் தேர்தல் தேதியை சுயேச்சையான அமைப்புக்கள் நிர்ணயம் செய்வதை பாஸ் தலைவர் சுட்டிக் காட்டினார்.

“மலேசியாவில் பிஎன் (கூட்டரசு அரசாங்கம்) தான் எப்போதும் வெற்றி பெறுவதை உறுதி செய்யும் வழியை தேர்வு செய்கிறது. வெற்றியை நிலை நிறுத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் தேதியை நிர்ணயம் செய்யும் அதிகாரம் பிஎன் அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளது.”

“மோசடி, வாக்காளர்களுக்கு லஞ்ச விநியோகம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்த பின்னரும் எதிர்க்கட்சிகளைச் சிக்க வைப்பதற்கான பிரச்னைகளை உருவாக்கிய பின்னரும் எதிர்க்கட்சிகள் மீது அவதூறுகளை கூறிய பின்னரும் மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.”

‘ஜனநாயகம் மலரும்’

பல சர்வாதிகார நாடுகளில் ஜனநாயகம் மீண்டு தழைத்துள்ளதை ஹாடி சுட்டிக் காட்டினார்.

“சோவியத் யூனியனைக் கட்டுப்படுத்தி வந்த கம்யூனிச இரும்புக்கரம் உடைந்ததும் அதில் இணைந்திருந்த பல நாடுகள் ஜனநாயகத்துக்கு மாறின.”

“பிலிப்பீன்ஸில் பெர்டினாண்ட் மார்க்கோஸ் பதவி இழந்தார். அதனைத் தொடர்ந்து இந்தோனிசியாவில் சுஹார்த்தோ பதவி விலகினார். தேர்தலுக்கு முன்னரே தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்த இராணுவ  ஆட்சி மன்றங்களின் கட்டுக்குள் இருந்த அரபு நாடுகளில் கூட ஜனநாயகம் மலர்ந்துள்ளது. மியான்மாரிலும் அது நிகழ்கின்றது.”

பாஸ் கட்சிக்கு வாக்களிப்பதின் மூலம் ‘அம்னோவினால் சேதமடைந்துள்ள” இஸ்லாத்தின் தோற்றத்தைச் சரி செய்யுமாறும் ஹாடி முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொண்டார். அதே வேளையில் பிஎன் -னை ஆட்சியிலிருந்து இறக்குவதற்கு மற்ற சமூகங்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.

“அதனைத் தொடர்ந்து வெற்றி கிடைத்தால் ஜனநாயக முறையில் காணப்படும் எல்லாக் குளறுபடிகளும் சரி செய்யப்பட்டு விடும். எதிர்காலத்தில் ஆளுமையில் பலவீனங்களும் தவறுகளும் நிகழ்ந்தால் மக்கள் பாஸ் கட்சியையும் பக்காத்தானையும் கூட நியாயமான வழிகளில் நிராகரிக்கலாம்,” என்றும் ஹாடி சொன்னார்.

 

TAGS: