“டெல்கோ, வரியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதை அரசாங்கம் தடுக்க முடியாது”

முன் கட்டணம் செலுத்தப்பட்ட கைத் தொலைபேசி சேவைகளுக்கான ஆறு விழுக்காடு வரியை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வசூலிப்பதை நிறுத்துவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை.

இவ்வாறு மலேசிய வரி விதிப்பு ஆய்வுக் கழகத்தின் ( Chartered Taxation Institute Malaysia ) தலைவர் எஸ்எம் தண்ணீர்மலை கூறுகிறார்.

1998ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அந்த வரி உண்மையில் பயனீட்டு வரியாகும். சேவைகளை வழங்கும் மற்ற நிறுவனங்களும் அதனை பயனீட்டாளர்கள் மீது சுமத்தி விடுகின்றன என்றார் அவர்.

என்றாலும் அந்த வரியை முற்றாக அகற்றுவதின் மூலம் பயனீட்டாளர்களிடமிருந்து அந்த வரி வசூலிக்கப்படுவதை அரசாங்கம் இன்னும் நிறுத்த முடியும் என்றார் அவர்.

“(நிதி அமைச்சர்) அதனை அமைச்சரவைக்குக் கொண்டு செல்லலாம். 1975ம் ஆண்டுக்கான சேவை வரிச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது போல அமைச்சர் அதிகாரங்களைப் பயன்படுத்தலாம்.”

ஆனால் இந்த தேர்வு அரசாங்கத்திற்கு ஏற்புடையது அல்ல. காரணம் அரசாங்கத்தின் வரவு செலவுப் பற்றாக்குறை அதிகரித்து வருவதாகும். முன் கட்டணம் செலுத்தப்பட்ட கைத் தொலைபேசி சேவைகளுக்கான ஆறு விழுக்காடு வரி மூலம் அரசாங்கம் 750 மில்லியன் ரிங்கிட்டை வசூலிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அது தவிர அரசாங்கம் தனது நிறுவனங்கள் வழியாக வரிச் சுமையை மாற்றி விடும் முடிவு மீது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் தண்ணீர்மலை சொன்னார். பயனீட்டாளர்களுக்கு அந்த வரியை மாற்றி விட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எடுத்துள்ள முடிவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 2ஜி, 3ஜி போன்ற சேவைகளுக்கான அனுமதிகளை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் வழங்கியுள்ளது. ஆகவே அந்த ஆணையத்தை மீறுவதற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தயங்கக் கூடும்,” என அவர் குறிப்பிட்டார்.

அந்த சேவை வரியை பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டும் என்ற தங்கள் முடிவை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தள்ளி வைத்துள்ளதாக நேற்று தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் அறிவித்திருந்தார்.