இன்று வெளியிடப்படுவதாக இருந்த பெர்சே 3.0 பேரணி மீதான வீடியோவை உள்துறை அமைச்சின் இணையத் தளத்தில் சேர்க்கப்படுவதை அதன் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நிறுத்துமாறு தமது அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.
பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்தத் தகவலை வெளியிட்ட சீன மொழி நாளேடான நன்யாங் சியாங் பாவ், அந்த வீடியோவை இணையத் தளத்தில் சேர்ப்பதற்கு புதிய தேதி ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கூறியது.
அந்தப் பேரணியின் போது நிகழ்ந்த சம்பவங்கள் மீது பொது மக்கள் அறிந்து கொள்ளும்படி செய்வதே, பல்வேறு தரப்புக்களிடமிருந்து பெறப்பட்ட அந்த வீடியோ ஒளிப்பதிவுகளை வெளியிடுவதின் நோக்கம் என்றும் ஹிஷாமுடின் ஏற்கனவே கூறியுள்ளார்.
“அந்த வீடியோ பதிவுகளை பார்ப்பதின் மூலம் மக்கள் உண்மைகளின் அடிப்படையில் தங்கள் சொந்த கருத்தை உருவாக்கிக் கொள்ளலாம்,” என்றார் அவர்.
அந்த வீடியோ பதிவுகள் மீது மனநிறைவு கொள்ளாதவர்களிடமிருந்து சிவில் வழக்குகளையும் எதிர்நோக்க அமைச்சு தயாராக இருப்பதாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
“பேரணியில் பங்கு கொண்டவர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்களுக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்வது எங்கள் பொறுப்பாகும்.”
அமைச்சு உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ஹிஷாமுடின் சொன்னார்.
இதனிடையே அமைச்சின் வீடியோவை சமாளிக்கும் பொருட்டு டிஏபி இன்று 15 நிமிட தொகுக்கப்பட்ட வீடியோவை இன்று இணையத்தில் சேர்த்துள்ளது. அந்த வீடியோ போலீஸ் முரட்டுத்தனம் மீது கவனம் செலுத்துகிறது.
அமைச்சின் வீடியோவை வெளியிடப் போவதாக ஹிஷாமுடின் வலியுறுத்துவது பெர்சே 3.0ஐயும் பக்காத்தான் ராக்யாட்டையும் சிறுமைப்படுத்துவதற்கு பிஎன் அரசாங்கம் தொடங்கியுள்ள இயக்கத்தின் ஒரு பகுதி என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் சாடியுள்ளார்.