சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், தாம் WWW 15 வாகன எண் தகட்டை ஏலத்தில் எடுத்ததாகக் கூறப்படுவது பற்றிய கேள்விகளுக்கு நேற்று பதில் அளிக்கத் தடுமாறினார். ஆனால் இன்று அந்த எண்ணுக்கு தாம் ஒரு சென் கூடக் கொடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
தாம் கொடுக்க முன் வந்த ஏல விலையான 24,000 ரிங்கிட்டைக் கொடுக்க வேண்டாம் என்றும் அது “இலவசமானது” என்றும் சாலைப் போக்குவரத்துத்துறை தமக்குத் தகவல் அளித்திருப்பதாக இன்று பின்னேரம் அனுப்பிய டிவிட்டர் செய்தியில் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.
“அந்த எண் தகடு இலவசம் என சாலைப் போக்குவரத்துத் துறையிடமிருந்து அதிகாரத்துவக் குறிப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ஆகவே அதில் பணம் எதுவும் சம்பந்தப்படவில்லை. இது பற்றி மேலும் கேள்விகள் இருந்தால் சாலைப் போக்குவரத்துத் துறையை அணுகுங்கள். நன்றி,” என லியாவ் அந்த டிவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
ஆனால் இந்தத் தகவல் இன்று சைனா பிரஸ் நாளேட்டில் வெளியான செய்திக்கு முரணாக உள்ளது. வாகன எண் தகடுகளுக்கு ஏலம் கேட்கும் அனைவரும் அவற்றுக்குப் பணம் செலுத்த வேண்டும் என கூட்டரசுப் பிரதேச சாலைப் போக்குவரத்துத் துறைப் பேச்சாளரை மேற்கோள் காட்டி அது அந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சிடமிருந்து எண் தகடுகளை அமைச்சர்கள் இலவசமாகக் கோரலாம். ஆனால் லியாவ் ஏலத்தில் கோரியுள்ள “சூடான எண்களுக்கு” அது பொருந்தாது என்றும் அவர் சொன்னார்.
WWW 1 என்ற எண் தகட்டுக்கு ஜோகூர் சுல்தான் அரை மில்லியன் ரிங்கிட் செலுத்தியதைப் போல அத்தகைய எண்களை சுல்தான்கள் கூட ஏலத்தில் எடுக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.