யூனிசெல் என அழைக்கப்படும் யூனிவர்சிட்டி சிலாங்கூர் மாணவர்களுக்கு கடன்கள் கொடுப்பதை பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதி நிறுவனம் முடக்கி வைத்துள்ளதை உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இலவச உயர் கல்வியை வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கத்துக்கு உள்ள ஆற்றல் மீது சவால் விடுக்கும் பொருட்டு யூனிசெல் மாணவர்களுக்கு பிடிபிடிஎன் கடன்களை கொடுப்பதில்லை என முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
எதிர்க்கட்சிகள் தங்கள் மாநிலத்தில் இலவசக் கல்வியை வழங்க முடியும் என்பதை நிரூபிப்பதற்கு பிடிபிடிஎன் கடன் முடக்கம் ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்தையும் பிடிபிடிஎன் கடன் முடக்கம் கொண்டுள்ளதாகவும் காலித் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேட்டிடம் கூறினார்.
“பிகேஆர் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம் இலவசக் கல்வியை வழங்குவதில் தீவிரமாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனவே பிடிபிடிஎன் கடன் அவசியமில்லை,” என்றார் அவர்.
“எனவே புதிய யூனிசெல் மாணவர்களுக்கு கடன் கொடுப்பதை பிடிபிடிஎன் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளது. என்றாலும் இப்போது கடன்களைப் பெறும் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அந்த மாணவர்களுடன் தான் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் இன்னும் பிடிபிடிஎன்-னைக் கட்டுப்படுத்துகிறது,” என காலித் சொன்னதாகவும் உத்துசான் செய்தி தெரிவித்தது.