சுவாராம் இரண்டாவது நிதி திரட்டும் விருந்தை நடத்துகிறது

‘ஸ்கார்ப்பியோன் நடவடிக்கை 2.0’ எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டாவது நிதி திரட்டும் விருந்துக்கு சுவாராம் ஏற்பாடு செய்கிறது.

சர்ச்சைக்குரிய ஸ்கார்ப்பியோன் கொள்முதல் தொடர்பில் பிரஞ்சுக் கப்பல் கட்டும் நிறுவனமான டிசிஎன்எஸ்-க்கு எதிராக பிரஞ்சு நீதிமன்றங்களில் சுவாராம் தொடுத்துள்ள வழக்கிற்கு செலவு செய்ய மேலும் நிதிகளைச் சேர்ப்பது அந்த விருந்தின் நோக்கமாகும்.

பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் ஜுன் 15ம் தேதி அந்த விருந்து நடைபெறும். அந்த மனித உரிமைப் போராட்ட அமைப்பு கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடத்திய முதலாவது நிதி திரட்டும் விருந்தில் 250,000 ரிங்கிட் திரட்டப்பட்டது.

இந்த முறை 300,000 ரிங்கிட்டைத் திரட்டுவதற்கு நம்பிக்கை கொண்டுள்ளதாக அந்த நிகழ்வு பற்றி அறிவித்த சுவாராம் இயக்குநர் சிந்தியா கேப்ரியலும் பாடியா நட்வாவும் கூறினர்.

அந்த விருந்தில் பிரஞ்சு வழக்குரைஞர் ஜோசப் பிரெஹாம், பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, பிகேஆர் பத்து எம்பி தியான் சுவா, டிஏபி தேசியப் பிரச்சாரப் பிரிவு செயலாளர் டோனி புவா சுவாரான் இயக்குநர் சிந்தியா கேப்ரியல் ஆகியோர் உரையாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நாட்டை உலுக்கியுள்ள அந்த ஊழல் விவகாரம் சம்பந்தப்பட்ட விவரங்களை சாதாரண குடி மக்களுக்கும் சிவில் சமூக அமைப்புக்களுக்கும் தெரிவிக்க அந்த விருந்து ஒரு வாய்ப்பாக அமையும்,” என சுவாராம் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

ஸ்கார்ப்பியோன் கொள்முதல் தொடர்பில் பெரிமெக்கார் சென் பெர்ஹாட்டுக்கு கையூட்டாக 114 மில்லியன் யூரோவை டிசிஎன்எஸ் கொடுத்ததாகக் கூறப்படுவது மீது சுவாராம் டிசிஎன்எஸ்-ஸுக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

2002ம் ஆண்டு நஜிப் அப்துல் ரசாக் துணைப் பிரதமராகவும் தற்காப்பு அமைச்சராகவும் இருந்த காலத்தில் அந்த நீர்மூழ்கிகளை வாங்குவதற்கு  டிசிஎன்எஸ்-ஸுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2010ம் ஆண்டிலேயே டிசிஎன்எஸ்-ஸுக்கு எதிராக சுவாராம் வழக்குப் போட்டு விட்டது. ஆனால் அண்மையில் தான் பிரஞ்சு நீதிமன்றத்தில் அந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடங்கியுள்ளன.

அந்தக் கொள்முதல் தொடர்பில் “ஆதரவுச் சேவைகளை” வழங்குவதற்குப் பொறுப்பேற்றுள்ள பெரிமெக்காருக்கு 1 பில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட வேண்டும் என அப்போதைய தற்காப்பு அமைச்சர் நஜிப் கோரியதாக பிரஞ்சு விசாரணைகளை அடிப்படையாக கொண்டு சுவாராம் கூறிக் கொண்டுள்ளது.

அத்துடன் நஜிப்புக்கு அணுக்கமான நண்பரான அப்துல் ரசாக் பகிந்தா இயக்குநராக இருந்த Terasasi Ltd என்ற நிறுவனம் வழியாக மிகவும் ரகசியமான அரச மலேசியக் கடற்படை ஆவணங்கள் டிசிஎன்எஸ்-ஸுக்கு விற்கப்பட்டதாகவும் கடந்த வியாழக் கிழமை சுவாராம் அறிவித்துக் கொண்டது.

 

TAGS: