தகவல் அமைச்சு புதிதாக வெளியிட்டுள்ள ஒரே மலேசியா தார்மீக வழிகாட்டியில் குறிக்கப்பட்டுள்ள பண்புகளை பெர்சே 3.0 பங்கேற்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என தகவல் அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார்.
“ஏப்ரல் 28ம் தேதி டாத்தாரான் மெர்தேக்காவிலும் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் அலுவகத்திற்கு முன்பும் கலவரம் செய்த, முரட்டுத்தனமாகவும் வன்முறையாகவும் நடந்து கொண்ட எங்கள் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுங்கள்,” என இன்று அந்தப் புத்தகம் அறிமுகம் செய்யப்படுவதைக் காண வந்த 400 அரசு ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் அவர் கூறினார்.
“வன்முறை மலேசியப் பண்பாட்டின் பகுதி அல்ல எனக் கூறிய அவர், நாட்டின் பேச்சுக்கள் மூலம் பெறப்பட்டதே தவிர வன்முறையால் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“முன்னேறுங்கள்’ எனக் கூறிய மனிதருக்கு அல்லது அந்த நேரத்தில் ‘திடலைக் கைப்பற்றுங்கள்’ எனக் கூறிய மனிதருக்கு நாங்கள் சொல்வது இது தான் ‘திடலை மட்டுமல்ல, புத்ராஜெயாவை மட்டுமல்ல.”
“எங்களுக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. நீங்கள் நாட்டைக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் நாடாளுமன்ற ஜனநாயக கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும்,” என ராயிஸ் கூறிய போது பலத்த கைதட்டல் எழுந்தது.
கோலாலம்பூரில் ஜாலான் கொன்லே-யில் அமைந்துள்ள கைவினை வளாகத்தில் ‘Penyerlahan Amalan Nilai-Nilai Murni 1Malaysia’ ( ஒரே மலேசியா பண்புகளை விளக்கும்) புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்து ராயிஸ் பேசினார்.