பிடிபிடிஎன் கடன் முடக்க அபாயத்தை இன்னொரு சிலாங்கூர் கல்லூரியும் எதிர்நோக்குகிறது யூனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூர் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேசிய உயர் கல்வி நிதி நிறுவனக் (பிடிபிடிஎன்) கடன்கள் முடக்கப்பட்டுள்ளது சிலாங்கூர் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இன்னொரு உயர் கல்விக் கூடத்துக்கும் விரிவு செய்யப்படலாம்.
யுனிசெல்-லுக்கான கடன்களை நிறுத்தும் தனது முடிவை ஆதரித்து பிடிபிடிஎன் விடுத்த அறிக்கையில் Kuis என்னும் சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகமும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
“யூனிசெல், குயிஸ் போன்ற சிலாங்கூர் அரசாங்கத்தால் நிர்வாகம் செய்யப்படும் பல்கலைக்கழகங்கள் இலவசக் கல்வியை அமலாக்க தயாராக இருக்கின்றன என்றும் பிடிபிடிஎன் கடனை நிராகரிக்கின்றன என்றும் நாங்கள் கருதுகிறோம்.”
“சிலாங்கூர் அரசாங்கம் இலவசக் கல்வியை அமலாக்க கடப்பாடு தெரிவித்துள்ளதால் அதன் மாணவர்களுக்கு கல்விக் கடன்கள் இனிமேலும் தேவையில்லை என நாங்கள் நினைக்கிறோம்.”
“அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டதும் நாங்கள் யூனிசெல் மாணவர்களுக்கான கடன்களைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள முடிவு செய்தோம்,” என்று நன்யாங் சியாங் பாவில் வெளியான அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்னோ கோலா கிராவ் எம்பி முகமட் சைட் இட்ரிஸ் பிடிபிடிஎன்- னுக்கு தலைவராக இருக்கிறார்.
பக்காத்தான் தலைவர்களும் சிலாங்கூர் அரசாங்கமும் இலவசக் கல்வி என்ற யோசனையை வலியுறுத்தி வருவதாலும் பிடிபிடிஎன் ரத்துச் செய்யப்பட வேண்டும் எனக் கூறுவதாலும் கடனை முடக்கம் அமலாக்கப்பட்டதாக அந்த அறிக்கை விளக்கியது.
பிடிபிடிஎன்-கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என மாணவர்களை அன்வார் கேட்டுக் கொண்டதையும் அந்த அறிக்கை சாடியது. அது பிடிபிடிஎன்-னின் நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் மாணவர்களுக்குக் கடன்களை வழங்கும் அதன் ஆற்றலையும் பாதிக்கும் என்றும் அது தெரிவித்தது.
தனது மாணவர்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவர் என யூனிசெல் வாக்குறுதி அளித்து அதில் பிடிபிடிஎன்-மனநிறைவு கொண்ட பின்னர் கடன் முடக்கம் மீதான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.