சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் கோரிய WWW15 என்ற கவர்ச்சியான எண் தகடு மீது யாரோ ஒருவர் பொய் சொல்லியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹார் கூறியிருக்கிறார். அதன் மூலம் அவர் தமது மசீச சகாவை மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.
அந்தத் தகவலை வெளியிட்ட சின் சியூ நாளேடு கொங்-கின் பார்வையின் கீழ் சாலைப் போக்குவரத்துத் துறை இயங்குகிறது எனக் குறிப்பிட்டது.
“ஒவ்வொருவரும் உண்மையைப் பேசுவதுதான் முக்கியம். அனைவரும் அவ்வாறு செய்தால் அத்தகைய பிரச்னைகளே எழ வழியில்லை,” என அவர் சொன்னதாக அந்த நாளேட்டின் செய்தி தெரிவித்தது.
கார் எண் தகட்டை ஏலத்தில் எடுப்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் ஏலம் கேட்பதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றார் கொங்.
WWW15 எண் தகட்டை 24,000 ரிங்கிட்டுக்கு ஏலத்தில் எடுப்பதில் லியாவ் வெற்றி கண்டதாக தெரிய வந்த பின்னர் அந்த விவகாரம் தலைதூக்கியது.
முதலில் லியாவ் அந்த எண்ணுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பதை விளக்க முடியாமல் தடுமாறினார். அதற்கு லியாவ் பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என சாலைப் போக்குவரத்துத் துறை பின்னர் அறிக்கை வெளியிட்டதும் சர்ச்சை விரிவடைந்தது.
ஆனால் இறுதியில் சாலைப் போக்குவரத்துத் துறை இலவசமாக தமக்கு அந்த எண்ணை தகட்டை வழங்கி விட்டதாக லியாவ் கூறிக் கொண்டார்.
இதனிடையே ‘இடது கையிலிருந்து வலது கைக்குச் சென்றது’ என்ற தமது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் தெரிவித்துள்ளார்.
லியாவ் வழி நடத்தும் சுகாதார அமைச்சு அந்த WWW15 எண் தகட்டுக்கு பணம் கொடுத்ததா என்பது முக்கியமல்ல என கூறிய அவர், எல்லாப் பணமும் ஒருங்கிணைக்கப்பட்ட அரசாங்கக் கணக்கு ஒன்றில் சேர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
தமது கருத்தில் எந்த தவறும் இல்லை எனக் குறிப்பிட்ட சுவா, தம்மைக் குறை கூறுகின்றவர்கள் உண்மையில் பிரச்னையைப் புரிந்து கொள்ளவே இல்லை என்றார்.
எல்லா அமைச்சர்களுக்கும் இலவச எண் தகடு ஒன்று கொடுக்கப்படுவதாகவும் அதற்கு மேல் கோரினால் முறையாக ஏலம் கேட்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.